“போன வருசமே இதை பத்தி பேசிட்டோம்”.. திடீர் கேப்டன்ஷி மாற்றம்.. சிஎஸ்கே சிஇஓ சொன்ன சீக்ரெட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனி திடீரென சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து விலகியது குறித்து சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் நாளை (26.03.2022) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த சூழலில் தோனி தனது கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தோனி திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசிவிசுவநாதன் விளக்கம் அளித்துள்ளார். அதில், சிஎஸ்கே அணி சார்பாக நடைபெற்ற நிர்வாகக் கூட்டத்தில் தோனி இந்த முடிவினை எடுத்தார். அவருடைய முடிவை நாங்கள் மதிக்கிறோம். ஜடேஜாவிடம் கேப்டன் பதவியை ஒப்படைக்க இதுதான் சரியான நேரம் என உணர்ந்து தோனி இதை செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜடேஜாவும் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளார்’ என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘தோனி எப்போதுமே சிஎஸ்கே அணியின் நலனுக்கு எது முக்கியமோ அதைப்பற்றி மட்டுமே யோசிப்பவர். அதனால் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இதில் எங்களுக்கு எவ்வித ஆச்சரியமும் இல்லை. அதோடு ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்படுவது குறித்து ஆலோசிப்பது புதிது ஒன்றும் கிடையாது.
கடந்த ஆண்டே இதுகுறித்து எல்லாம் பேசி இருக்கிறோம். சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி கேப்டன்ஷி செய்ய தயாரானபோது எப்படி அவரிடம் தோனி பொறுப்பை ஒப்படைத்தாரோ, அதேபோல் தற்போது சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா தயாராகி இருப்பதை உணர்ந்த தோனி அவரது கேப்டன் பொறுப்பை தந்திருக்கிறார். களத்தில் ஒரு வீரராக ஜடேஜாவுக்கு தோனி வழி காட்டுவார்’ என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
அப்படி என்றால் இந்த ஆண்டுடன் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்று விடுவாரா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த காசி விஸ்வநாதன், ‘இல்லை, நான் அது பற்றி நினைக்கவில்லை. அவர் தொடர்ந்து விளையாடுவார்’ என தெரிவித்துள்ளார்.