‘இதை மனசுல வச்சுகிட்டு பந்து வீசு’!.. ஒரே ஓவரில் தலைகீழாய் மாறிய மேட்ச்.. அப்படி என்ன ‘சீக்ரெட்’ சொன்னார் ரோஹித்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதான் பந்து வீசும் முன் ரோஹித் ஷர்மா கூறிய சீக்ரெட் குறித்து ஷர்துல் தாகூர் பகிர்ந்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 4-வது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் அடித்து அசத்தினார். இது இவருக்கு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. ஆரம்பம் முதலே அதிரடி காட்ட ஆரம்பித்த இங்கிலாந்து அணி, இந்திய பந்து வீச்சாளர்களை சோதித்தனர். இதில் ஜாஸ் பட்லர் 9 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த டேவிட் மலன் 14 ரன்களில் அவுட்டாகினார். அப்போது 40 ரன்கள் அடித்து நங்கூரமாக நின்ற ஜேசன் ராய் ஹர்திக் பாண்டியா ஓவரில் அவுட்டாக்கி வெளியேறினார்.
இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ மற்றும் பென் ஸ்டோக்ஸ் கூட்டணி இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இதனால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதில் ஜானி பேர்ஸ்டோ 25 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இந்த நிலையில் 16-வது ஓவரின் முடிவில் காயம் காரணமாக கேப்டன் விராட் கோலி வெளியேற, கேப்டன்சி பொறுப்பை ரோஹித் ஷர்மா ஏற்றார்.
அப்போது வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூரை பந்துவீச ரோஹித் ஷர்மா அழைத்தார். ஷர்துல் தாகூர் வீசிய ஓவரின் முதல் பந்திலேயே பென் ஸ்டோக்ஸ் கேட்ச் கொடுத்து அவுட்டாக, அடுத்த பந்தில் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனும் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பரபரப்பாக சென்றுகொண்டிருந்த போட்டியில் இது பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் போட்டி முடிந்தபின் பேசிய ஷர்துல் தாகூர், ‘நான் போட்டியை ரசித்து விளையாடினேன். ஹர்திக் சில யோசனைகள் கூறினார். அப்போது வந்த ரோஹித், உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய் எனக் கூறினார். அதேபோல் இந்த மைதானத்தில் ஒரு பகுதி பெரிதாகவும், மற்றொரு பகுதி சிறிதாகவும் உள்ளது. இதை மனதில் வைத்து பந்து வீசு என ரோஹித் எனக்கு அறிவுரை கூறினார்’ என அவர் கூறினார்.