"ஜடேஜாவ இதுனால தான் சிஎஸ்கே 'RETAIN' பண்ணாங்க".. அஸ்வின் போட்ட கணக்கு.. "கூட்டி கழிச்சு பாத்தா கரெக்ட்டா இருக்கே"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் முடிவடைந்திருந்த நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது.
டி 20 உலக கோப்பை தொடர் முடிவடைந்திருந்த நிலையில், அடுத்ததாக பல கிரிக்கெட் தொடர்களும் நடைபெற்று வருகிறது.
இதற்கு மத்தியில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான பணிகளும் தற்போதிலிருந்தே தீவிரமாக இயங்கி வருகிறது.
டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் வைத்து ஐபிஎல் மினி ஏலம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு முன்பாக, ஐபிஎல் தொடரில் மொத்தமுள்ள 10 அணிகளும் எந்தெந்த வீரர்களை அடுத்த சீசனில் தக்க வைத்துக் கொள்ள போகிறார்கள் என்பது குறித்தும், விடுவிக்கும் வீரர்கள் குறித்தும் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது.
ஒவ்வொரு அணியும் சில சர்ப்ரைஸான முடிவை எடுத்திருந்த அதே வேளையில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா இடம்பெறுவாரா என்ற கேள்வி கடந்த பல நாட்களாகவே பரவலாக இருந்து வந்தது. இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சென்னை அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், தொடரின் பாதியிலேயே மீண்டும் சிஎஸ்கேவின் கேப்டனாக தோனி செயல்பட்டிருந்தார். அதே போல, ஒரு சில போட்டிகளுக்கு முன்பாக காயம் காரணமாகவும் ஜடேஜா ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருந்தார்.
இதற்கு மத்தியில், 2023 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் சென்னை அணி அவரை தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது வெளியேற்றுமா என்றும் பலர் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், சமீபத்தில் வெளியான பட்டியலில் மீண்டும் சென்னை அணி ஜடேஜாவை தக்க வைத்துக் கொண்டிருந்தது. இது தொடர்பாக ஜடேஜா மற்றும் சிஎஸ்கே அணியும் சோஷியல் மீடியாவில் சில பதிவுகளை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், ஜடேஜாவை மீண்டும் சிஎஸ்கே தக்க வைத்தற்கான காரணம் குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துக்களை தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"ரவீந்திர ஜடேஜா போல அந்தஸ்துள்ள வீரர் உங்கள் அணியில் இருந்து விலகி வேறு அணிக்கு ஆட விரும்புவதாக கூறினால் அதனை நினைத்து பாருங்கள். இதனை இரண்டு கோணங்களில் பார்க்க வேண்டும். அவரை போல ஒரு வீரர் அணியில் இருந்து போனால் 16 கோடி ரூபாய் கிடைக்கும் என்பது ஒன்று.
ஆனால், அவரை போன்ற ஒரு வீரரின் இடத்தில் எப்படி வேறு ஒருவரை நிரப்ப முடியும்?. அவரை போல ஒரு வீரர் வேறு அணிக்கு போனால் எப்படி பலம் வாய்ந்து அந்த அணி இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். அவரை போல ஒரு வீரரின் இடத்தை சென்னை அணியால் நிரப்பவே முடியாது. அதனை எல்லாம் யோசித்து தான் ஜடேஜாவின் மதிப்பை அறிந்து சிஎஸ்கே அவரை தக்க வைத்துக் கொண்டது" என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அதே போல, நடைபெறும் மினி ஏலத்தில் சிஎஸ்கே உள்ளிட்ட அணிகள் இந்திய அணி வீரர் மனிஷ் பாண்டேவை எடுக்க மும்முரம் காட்டும் என்றும் அஸ்வின் கூறி உள்ளார்.