"'கோலி' ஆடப் போறதில்ல,,.. அதுக்குன்னு நாங்க போய் 'ரெஸ்ட்' எடுக்க முடியுமா??..." ஒரே போடாக போட்ட 'வீரர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகள் விளையாடவுள்ளது.
இம்மாதம் 27 ஆம் தேதியன்று இந்த தொடர் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி 3 டி 20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, டி 20 மற்றும் ஒரு நாள் தொடர் முழுவதுமாக பங்கேற்கவுள்ள நிலையில், முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் மட்டும் கலந்து கொண்டு தனது குழந்தை பிறப்புக்காக இந்தியா திரும்பவுள்ளார்.
இதன் காரணமாக அவர் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடப் போவதில்லை. இதனால் கோலி இல்லாத இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி எளிதில் வீழ்த்தி விடும் என பலர் கணித்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் கோலி குறித்து பேசிய நாதன் லயன், விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோர் விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, 'உலகத்தின் சிறந்த வீரர்களுடன் தான் நாம் கிரிக்கெட் ஆட வேண்டும். ஸ்டீவ் ஸ்மித்தை போன்று விராட் கோலியும் உலகளவில் சிறந்த வீரர் தான். அதனால் அவர் இல்லாத டெஸ்ட் அணியுடன் விளையாடவுள்ளது சற்று ஏமாற்றம் தான். அவர் இல்லையென்றால் இந்திய அணியை எங்களால் எளிதில் வீழ்த்தி முடியும் என்றில்லை. இந்திய அணியில் புஜாரா, ரஹானே போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதனால் கோலி இல்லை என்பதற்காக நாங்கள் சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என்றில்லை.
இந்திய அணியை எதிர்கொள்ள நாங்கள் அதிகம் எங்களை தயார்படுத்த வேண்டியுள்ளது. நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் விராட் கோலி இடம்பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனாலும், அவர் பங்கேற்கும் ஒரே போட்டியில் அவரை எளிதில் வீழ்த்துவோம்' என நாதன் லயன் தெரிவித்துள்ளார்.