ஐபிஎல் புதிய அணி.. மீண்டும் கேப்டன் ஆகும் கே எல் ராகுல்.. இத்தன கோடிக்கு அவர வாங்கி இருக்காங்களா??
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை முன்னிட்டு, அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரு அணிகள், மூன்று வீரர்களை தேர்வு செய்துள்ளது.
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர், ஏப்ரல் மாதம் ஆரம்பமாகலாம் என கூறப்படும் நிலையில், தற்போதிலிருந்தே இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தாண்டு ஐபிஎல் தொடருக்காக அகமதாபாத் மற்றும் லக்னோ என இரு அணிகளுடன் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்ளவுள்ளது.
புதிய அணிகள் இணைந்ததன் காரணமாக, ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், கடந்த முறை பங்குபெற்ற 8 அணிகளும், 2- 4 வீரர்கள் வரை அணியில் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். மீதமுள்ள வீரர்களை, ஐபிஎல் மெகா ஏலத்தில் அவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதே போல புதிதாக இணைந்துள்ள அணிகள், 3 வீரர்களை (2 இந்திய வீரர்கள், 1 வெளிநாட்டு வீரர்) மற்ற அணிகள் நீக்கிய வீரர்கள் பட்டியலில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த 3 வீரர்கள் யார் என்பது பற்றி, அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரு அணிகளும் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அகமதாபாத் கேப்டன்
ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில் மற்றும் ரஷீத் கான் ஆகியோரை அகமதாபாத் அணி தேர்வு செய்துள்ள நிலையில், இந்த அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹர்திக் பாண்டியா மற்றும் ரஷீத் கான் ஆகியோரை தலா 15 கோடிக்கும், இளம் வீரர் சுப்மன் கில்லை 8 கோடிக்கும் அகமதாபாத் அணி வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் கேப்டனாகும் ராகுல்
மற்றொரு புதிய அணியான லக்னோ, கே எல் ராகுல், ரவி பிஷ்னோய் மற்றும் மார்கஸ் ஸ்டியோனிஸ் ஆகிய வீரர்களை வாங்கியுள்ளது. இதில், லக்னோ அணியின் கேப்டனாக ராகுல் செயல்படவுள்ளார். மேலும், ராகுலை 17 கோடிக்கும், ஸ்டியோனிஸை 9.2 கோடி ரூபாய்க்கும், ரவி பிஷ்னோயை 4 கோடி ரூபாய்க்கும், லக்னோ அணி வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 கோடி ரூபாய்
இதில், லக்னோ அணியை வழி நடத்தவுள்ள ராகுலை 17 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக, மற்ற 8 ஐபிஎல் அணிகளும், அதிகபட்சம் 4 வீரர்கள் வரை தக்க வைத்துக் கொண்ட நிலையில், அதில் ஜடேஜாவை சிஎஸ்கேயும், ரோஹித் ஷர்மாவை மும்பை அணியும், ரிஷப் பண்ட்டை டெல்லி அணியும், தலா 16 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைத்துக் கொண்டது.
விமர்சனம்
ஆனால், ராகுலை சொந்தமாக்கிக் கொள்ள, லக்னோ அணி அவருக்கு 17 கோடி ரூபாயை வழங்கியுள்ளது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரையில், சிறந்த பேட்ஸ்மேன் என்ற பெருமை ராகுலுக்கு இருந்தாலும், இன்னொரு பக்கம் அவரது கேப்டன்சி கடுமையான விமர்சனத்தை சந்தித்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரில், இதுவரை முடிந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த இந்திய அணி, தொடரையும் இழந்துள்ளது.
இதில், குறிப்பாக ராகுலின் கேப்டன்சி, கடுமையான விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. அப்படி இருக்க, ராகுலை 17 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ள லக்னோ அணி, அவரை கேப்டனாக நியமித்துள்ளது பற்றி, பல்வேறு கருத்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்கள் ஆதரவு
மேலும், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை தலைமை தாங்கவுள்ள ராகுல், தனது கேப்டன்சி மீதான விமர்சனத்தை நீக்கும் வகையில், மிகச் சிறப்பாக அணியைத் தலைமை தாங்க வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் ஆதரவளித்தும் வருகின்றனர்.