“நான் மட்டும் RCB டீம்ல இருந்திருந்தா இந்த தப்பை பண்ணிருக்கவே மாட்டேன்”.. ஒரே போடாக போட்ட சேவாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்திருந்தால் இந்த தவறை செய்திருக்க மாட்டேன் என சேவாக் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூரில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராட் கோலி, மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகிய 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்தது.
பெங்களூரு அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக கருதப்பட்ட சஹால் தக்கவைக்கப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நடந்த ஐபிஎல் மெகா ஏலத்திலும் சஹாலை பெங்களூரு அணி எடுக்கவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.
பெங்களூரு அணிக்காக கடந்த 8 ஆண்டுகளாக சஹால் விளையாடியுள்ளார். அந்த அணிக்காக மொத்தம் 114 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 139 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பல போட்டிகளில் பெங்களூரு அணி வெற்றி பெற சஹால் முக்கிய காரணமாக இருந்துள்ளார். தற்போது அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்து உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சேவாக் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘சஹால் இல்லாதது ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய இழப்பு. பெங்களூரு மற்றும் துபாய் போன்ற சிறிய மைதானங்களில் அவர் சிறந்த வீரராக விளங்கியுள்ளார். அந்த மைதானங்களில் அதிக விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். நான் மட்டும் ஆர்சிபி அணியில் இருந்திருந்தால் எந்த நிலையிலும் சஹாலை தக்க வைக்காமல் விடும் தவறை செய்திருக்க மாட்டேன்’ என சேவாக் கூறியுள்ளார்.
நேற்று நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடியது. 205 ரன்கள் எடுத்தும் அப்போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.