‘அந்த ரெண்டு பேரை உடனே இங்கிலாந்துக்கு அனுப்பி வைங்க’!.. கோரிக்கை வைத்த கோலி?.. மறுத்த தேர்வுக்குழு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசுப்மன் கில் காயமடைந்துள்ள நிலையில், இரண்டு இளம் வீரர்களை இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட அனுப்பி வைக்குமாறு தேர்வக்குழுவிடம் கோலி கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. அதனால் இந்திய அணியின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இதனை அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற இந்த தொடருக்காக இந்திய வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதனிடையே இந்திய ஏ அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
தற்போது விராட் கோலி தலைமையிலான சீனியர் வீரர்கள் அடங்கிய குழு இங்கிலாந்தில் உள்ளதால், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய ஏ அணி இலங்கைக்கு எதிராக விளையாட உள்ளது. இதற்கான வீரர்களின் பட்டியல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த வீரர்கள் அனைவரும் இலங்கை சென்று பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இளம் வீரர் ப்ரித்வி ஷாவை தொடக்க ஆட்டக்காரராக விளையாட வைக்க கோலி முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
அதனால் இலங்கை தொடருக்கு தேர்வாகியுள்ள ப்ரீத்வி ஷாவை இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்குமாறு தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மாவிடம் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கோரிக்கை வைத்ததாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் PTI செய்தி ஏஜென்சிக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பேக் அப் வீரராக தேவ்தத் படிக்கலையும் அனுப்பி வைக்க கூறியதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த இரண்டு வீரர்களும் தற்போது இலங்கைக்கு எதிரான தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் கோலியின் கோரிக்கையை தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா நிராகரித்ததாக கூறப்படுகிறது. இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர் ஜூலை 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி முடிவெடுத்தால், ப்ரித்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கல் இங்கிலாந்து செல்ல வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.