"அவர அடிச்சு ஆட சொல்லுங்க... இல்ல ஆர்டர மாத்துங்க"... 'சாம்பியன் அணியை கழுவி ஊற்றிய பிரபல வீரர்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் 2 முறை கோப்பையை வென்ற அணியை பிட்ஸ் அண்ட் பீசஸ் அணி என முன்னாள் வீரர் சேவாக் கடுமையாக விளாசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் இதுவரை 2 முறை கோப்பையை வென்றுள்ள கேகேஆர் அணி, நடப்பு சீசனில் வலுவான அணியைப் பெற்றுள்ளபோதும் சில போட்டிகளில் மோசமாக சொதப்பி வருகிறது. தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்த சீசனை தொடங்கிய கேகேஆர் அணி முதல் 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் இருந்த நிலையில், நேற்றைய மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்துள்ளது. இருப்பினும் அந்த அணி தொடர்ந்து புள்ளி பட்டியலில் 4வது இடத்திலேயே உள்ளது.
கேகேஆர் அணியின் பவுலிங் சிறப்பாக உள்ள நிலையில், பேட்டிங் தான் தொடர்ந்து சொதப்பி வருகிறது. ஷுப்மன் கில், ராணா, மோர்கன், தினேஷ் கார்த்திக், ரசல் என மிரட்டலான பேட்ஸ்மென்களை பெற்றிருந்தும் பேட்டிங் ஆர்டரை உறுதிப்படுத்தாததால் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதற்கிடையே சீசனின் இடையில் மும்பைக்கு எதிரான போட்டிக்கு முன்பாக திடீரென கேப்டன்சியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலக, அந்த பொறுப்பு மோர்கனுக்கு வழங்கப்பட்டது. பாதி சிசனில் செய்யப்பட்ட இந்த கேப்டன்சி மாற்றமும் அந்த அணிக்கு கூடுதல் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
இந்நிலையில் கேகேஆர் அணி குறித்து பேசியுள்ள சேவாக், "கேகேஆர் கேப்டன் அணி வீரர்களுடன் அமர்ந்து இதுவரை செய்த தவறுகள் குறித்து ஆலோசித்து அணியிலுள்ள சிக்கல்களை களைவது அவசியம். அணியின் பலம் குறித்து சிந்தித்து வலுவான மற்றும் இறுதியான ஆடும் லெவன் குறித்து உறுதியான முடிவை எடுக்க வேண்டும். அனைத்து வீரர்களையும் சுதந்திரமான மனநிலையுடன் அவர்களுடைய இயல்பான ஆட்டத்தை ஆட அனுமதிக்க வேண்டும். இப்போது கேகேஆர் அணி பிட்ஸ் அண்ட் பீசஸ் அணியாகவே உள்ளது. கேப்டன் அணியை முன்னின்று நடத்த வேண்டும். ஷுப்மன் கில்லை அடித்து ஆட சொல்ல வேண்டும் இல்லையென்றால் பேட்டிங் ஆர்டரை மாற்ற வேண்டும்" என விமர்சித்துள்ளார்.