'இந்த சீசனே நிலைமை ஒன்னும் சரியில்ல!!!'... 'வீரர்களுக்கு ஷாக் கொடுத்து'... 'அணிகள் எடுக்குப்போகும் அதிரடி முடிவு?!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தாண்டு ஐபிஎல் தொடரால் சில அணிகள் நஷ்டத்தில் இருப்பதாகவும் வெற்றிகளை குவித்த ஐபிஎல் அணிகள் கூட பெரிய லாபம் ஈட்ட முடியாத நிலையிலேயே இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தாண்டு ஐபிஎல் தொடர் மாபெரும் வெற்றி பெற்றுள்ள போதும், பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகள் அதனால் பெரியளவில் லாபம் சம்பாதிக்கவில்லை எனவும், போட்டிகளை ஒளிபரப்பிய தொலைக்காட்சி குழுமம் மட்டுமே கடந்த ஆண்டை விட ஓரளவு லாபம் சம்பாதித்தாகவும் கூறப்படுகிறது. 2020 ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறும் என்ற அடிப்படையில் ஏலத்தில் வீரர்களை வாங்கிய அணிகள் விளம்பர ஒப்பந்தங்களையும் இந்தியாவில் நடக்கும் தொடரை மனதில் வைத்தே செய்தன.
ஆனால் கொரோனா பாதிப்பால் எல்லாமே கடைசியில் மாறி இந்தாண்டு தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றதால் விளம்பர ஒப்பந்தங்கள் செய்த பல நிறுவனங்கள் பின்வாங்கியதுடன், போட்டிகளை நேரில் காண ரசிகர்கள் வராததாலும் ஐபிஎல் அணிகள் லாபத்தை இழந்துள்ளன. குறிப்பாக போட்டிகளை நேரில் காண வரும் ரசிகர்கள் தாங்கள் ஆதரிக்கும் ஐபிஎல் அணியின் உடையை வாங்குவதிலும், டிக்கெட் வருவாயிலும் கிடைக்கும் பங்கை அணிகள் இழந்துள்ளன.
மேலும் சில அணிகளுக்கு போதிய ஸ்பான்சர்கள் கூட கிடைக்காதது மற்றும் பிசிசிஐ தங்களுடைய டைட்டில் ஸ்பான்சரை கடைசி நேரத்தில் இழந்தது போன்றவையும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன. முன்னதாக 440 கோடிக்கு போடப்பட்ட ஒப்பந்தம் குறைக்கப்பட்டு, 222 கோடி ரூபாய்க்கு ட்ரீம் 11 நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றியது. இப்படி பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகள் விளம்பர ரீதியாக அடி வாங்கியபோதும், வீரர்களுக்கு முன்பு அவர்களை ஏலத்தில் எடுத்த அதே சம்பளத்தை அளிக்க வேண்டிய கட்டாயம் அணிகளுக்கு ஏற்பட்டது.
தற்போது ஐபிஎல் அணிகள் வீரர்கள் சம்பளத்துக்காக ஆண்டு ஒன்றுக்கு 85 கோடி வரை செலவு செய்யலாம் எனும் சூழலில், 2020 தொடரில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தால் அடுத்த ஆண்டு வீரர்கள் சம்பளத்தை குறைக்க அணிகள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 2021 ஐபிஎல் தொடருக்கு முன் நடைபெற உள்ள மெகா ஏலத்தின்போது அணிகள் திட்டமிட்டு ஏலத் தொகையை குறைக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்தாண்டு ஐபிஎல் தொடர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் அடுத்த ஆண்டு அணிகள் அதிக விளம்பர வருவாய் ஈட்டினால் வீரர்களின் சம்பளம் குறைக்கப்படாமல் போகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
