அவர் இடத்தை இன்னொருத்தர் நிரப்புறது ரொம்ப கஷ்டம்.. என்ன செய்யப்போறாங்க சிஎஸ்கே?.. இர்பான் பதான் ஓபன் டாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் இளம் வீரர் காயத்தால் அவதிப்பட்டு வருவது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2022
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் மார்ச் 26-ம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ளது. இதுவரை 8 அணிகள் விளையாடி வந்த நிலையில், இந்த ஆண்டு முதல் 2 புதிய அணைகள் இணைந்துள்ளன. அதனால் மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதல் போட்டி
இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற உள்ளது என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
சிஎஸ்கே
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் முக்கிய இளம் வீரராக கருதப்படும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் காயத்தால் ஓய்வில் உள்ளார். அதனால் இப்போட்டியில் அவர் விளையாடுவாரா என சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை ஐபிஎல் தொடர் நடப்பதற்கு முன் காயம் குணமடைய வில்லை என்றால், தீபக் சஹார் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது.
இர்பான் பதான்
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘சிஎஸ்கே அணி தீபக் சஹாரின் இடத்தை எப்படி நிரப்பப்போகிறது என தெரியவில்லை. ஏனென்றால் தீபக் சஹர் பவர்ப்ளே ஓவர்களில் மிக சிறப்பாக பந்துவீசி விக்கெட் எடுக்கக் கூடியவர். ஒருவேளை அவர் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும். தீபக் சஹர் விளையாடும் இடத்தில் இளம் வீரர்கள் இருந்தாலும் அவரைப் போன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமா என கேட்டால் அது சந்தேகம்தான்’ என இர்பான் பதான் கூறியுள்ளார்.
தீபக் சஹார்
சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை தொடரின் போது தீபக் சஹாரின் தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதனால் அந்த தொடரின் பாதியிலேயே அவர் வெளியேறினார். தற்போது அவர் ஓய்வில் உள்ளதால், ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. பல போட்டிகளில் பவர் பிளே ஓவர்களில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, சிஎஸ்கே அணி வெற்றி பெற தீபக் சஹார் முக்கிய காரணமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
