“மூடநம்பிக்கை எல்லாம் இல்ல”.. 7-ம் நம்பரை வச்சதுக்கு காரணம் இதுதான்.. முதல்முறையாக சீக்ரெட்டை உடைத்த ‘தல’ தோனி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனி தனது ஜெர்சியில் நம்பர் 7 என வைத்ததற்கான காரணத்தை முதல்முறையாக கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் பல வரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ளார். டி20, ஒருநாள், சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி நடத்தும் மூன்று விதமான உலகக்கோப்பை தொடரிலும் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார். இவர் தலைமையிலான சிஎஸ்கே அணி நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
தோனி போலவே அவரது ஜெர்சியில் இருக்கும் 7-ம் நம்பரும் ரசிகர்களிடையே எப்போதும் கவனம் பெற்று வருகிறது. இது லக்கி நம்பராக இருக்கலாம், அதனால்தான் இந்த நம்பரை தோனி பயன்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த சூழலில் இதுகுறித்து தோனி விளக்கம் கொடுத்துள்ளார்.
கலந்துரையாடல் ஒன்றில் பேசிய அவர், ‘உண்மையாகவே எனக்கு 7-ம் நம்பர் லக்கி என்றெல்லாம் கிடையாது. என் ஜெர்சியில் அந்த நம்பரை தேர்வு செய்ய காரணம், நான் பிறந்த தேதியும், மாதமும் 7. அதனால்தான் அந்த நம்பரை தேர்வு செய்தேன். வேற எந்த காரணமும் கிடையாது.
பொதுவாக 7-ம் நம்பரை பலரும் நடுநிலை (Neutral) என சொல்வார்கள். அது நமக்கு சாதகமாக இல்லை என்றாலும், எதிராக வேலை செய்யாது என சொல்வார்கள். ஆனால் அது மாதிரியான மூடநம்பிக்கைகளில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆனாலும் அந்த எண் எனக்கு மிகவும் பிடிக்கும்’ என தோனி தெரிவித்துள்ளார்.