'இப்போதான் இதெல்லாம்'... 'முன்னாடி நான் யாருன்னு தெரியும்ல'... 'ஸ்ரேயாஸ் சர்ச்சையால்'... 'காட்டமாக விளாசிய கங்குலி!!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிசிசிஐ தலைவர் கங்குலி குறித்து டெல்லி அணியின் இளம் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்த கருத்து ஒன்று பெரிய சர்ச்சையாகியுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த தொடரின் தொடக்கத்தில் இருந்து இளம் படையை கொண்டு இருக்கும் டெல்லியின் பேட்டிங் ஆர்டர் மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதிலும் ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. கடந்த தொடரிலேயே இவரின் கேப்டன்சி பாராட்டப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு முன் ஷ்ரேயாஸ் ஐயர் கொடுத்த பேட்டி ஒன்றுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
அந்தப் பேட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர், "நான் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவது சந்தோசம் அளிக்கிறது. டெல்லி அணியின் கேப்டனாக அணியை வழி நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு கங்குலி நிறைய உதவி செய்துள்ளார். என்னை அவர்தான் வழி நடத்தி வருகிறார். நான் டெல்லியை வழி நடத்த கங்குலியின் வழிகாட்டுதல் மற்றும் ரிக்கி பாண்டிங் கொடுத்த அறிவுரைகள்தான் காரணம். எனக்கு இரண்டு பேருமே வழி காட்டிகள். அவர்களுக்கு என் நன்றி" எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து கங்குலி என்பவர் பிசிசிஐ தலைவர், அவர் தனிப்பட்ட வீரர் ஒருவருக்கு ஆதரவாக செயல்பட கூடாது. தனிப்பட்ட வீரர் ஒருவரை அவர் சப்போர்ட் செய்ய கூடாது. அதேபோல ஐபிஎல் அணிகளையும் தனிப்பட்ட முறையில் அவர் சப்போர்ட் செய்ய கூடாது என தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்தது. அதன்பின்னர் இதுகுறித்து விளக்கமளித்த ஷ்ரேயாஸ் ஐயர், "இந்த விஷயத்தை இப்படி தவறாக பரப்புவார்கள் என எதிர்பார்க்கவில்லை. கங்குலி, பாண்டிங் இருவரும் எனக்கு ஒரு இளம் வீரர் என்ற ரீதியில் அறிவுரைகள் வழங்கியுள்ளனர்.
என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்களுக்கு நான் பெரிய அளவில் நன்றிக் கடன் பட்டு இருக்கிறேன். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவே இப்படி பேசினேன். இதில் எந்த தவறும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இதுபற்றி பேசியுள்ள கங்குலி, "நான் கடந்த வருடம் ஷ்ரேயாஸ் ஐயருக்கு உதவி செய்தேன். அது உண்மைதான். அதில் என்ன தவறு இருக்க முடியும். பல வீரர்களுக்கு நான் உதவி செய்துள்ளேன். எந்த ஒரு வீரருக்கும் உதவி செய்யும், அறிவுரை வழங்கும் உரிமை எனக்கு இருக்கிறது.
நான் இப்போது பிசிசிஐ தலைவராக இருக்கலாம். ஆனால் நான் முன்னாள் கிரிக்கெட் வீரர். இந்தியாவுக்காக நான் கிட்டத்தட்ட 500 போட்டிகள் ஆடி இருக்கிறேன் என்பதை யாரும் மறக்க வேண்டாம். நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன், யாரிடம் வேண்டுமானாலும் பேசுவேன். நான் இளம் வீரர்களிடம் பேசுவதில் எந்தத் தவறு இல்லை. கோலியோ, ஷ்ரேயாஸ் ஐயரோ யாராக இருந்தாலும் அவர்களின் வளர்ச்சிக்கு நான் கண்டிப்பாக உதவி செய்வேன்" எனக் காட்டமாக கூறியுள்ளார்.