"கோலி ஒரு ரோல் மாடலா என்னைக்கும் இருக்க முடியாது.. கேப்டன் இப்டி பண்றது.." விளாசிய கம்பீர்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலியின் மோசமான செயல்பாடு குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில், இலக்கை நோக்கி ஆடி வரும் தென்னாப்பிரிக்க அணி, கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்பில் உள்ளது.
இதுவரை நடந்து முடிந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, தொடரைக் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியாளாக போராடிய ரிஷப் பண்ட்
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 223 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 210 ரன்களும் எடுத்தது. தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில், முதலில் ஆடிய இந்திய அணி, 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் சொதப்ப, தனியாளாக அதிரடி காட்டிய ரிஷப் பண்ட் சதமடித்து அசத்தியிருந்தார்.
கடும் சர்ச்சை
இதனைத் தொடர்ந்து, வெற்றி இலக்கை நோக்கி ஆடி வரும் தென்னாப்பிரிக்க அணி, வெற்றிக்கு மிக அருகேயுள்ளது. ஏதேனும் மாயாஜாலம் நடந்தால் மட்டுமே, இந்திய அணியால் வெற்றி பெற முடியும். இதனிடையே, இந்த போட்டிக்கு மத்தியில் நடந்த சம்பவம் ஒன்று, கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தயிருந்தது. இரண்டாவது இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, அஸ்வின் வீசிய பந்தில், எல்கர் எல்பிடபுள்யூ ஆனார்.
முறையிட்ட இந்திய வீரர்கள்
அப்போது, போட்டி நடுவர் இதற்கு அவுட் என தெரிவித்தார். ஆனால், எல்கர் இதனை ரிவியூ செய்த நிலையில், மூன்றாம் நடுவருக்கு சென்ற போது, பந்து ஸ்டம்பிற்கு மேல் சென்றதால், நாட் அவுட் என கொடுக்கப்பட்டது. இதனால், திடீரென பந்து எப்படி பவுன்ஸ் ஆகும் என இந்திய வீரர்கள் நடுவரிடம் முறையிட்டனர்.
கோலியின் செயல்பாடு
இந்திய வீரர்களான கோலி, அஸ்வின் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர், தென்னாப்பிரிக்க அணியை குறிப்பிட்டு சில விஷயங்களை ஆக்ரோஷமாக தெரிவித்தனர். '11 பேருக்கு எதிராக ஒரு நாடே விளையாடுகிறது' என ராகுல் குறிப்பிட்டார். கோலியும், 'உங்கள் அணி மீது கவனம் செலுத்துங்கள். எதிரணியின் மீது அல்ல' என தெரிவித்தார். இப்படி இவர்கள் பேசியது, ஸ்டம்ப் மைக்கில் பதிவான நிலையில், இது தொடர்பான ஆடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
கம்பீர் காட்டம்
இந்நிலையில், கோலி உள்ளிட்ட சில இந்திய வீரர்களின் செயல்பாடு குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'இந்த விவகாரத்தில் கோலி மிகவும் முதிர்ச்சி இல்லாதவரைப் போல செயல்பட்டுள்ளார். ஒரு இந்திய கேப்டன் இப்படி கூறுவது என்பது, மிகவும் மோசமான செயல். ஒரு சர்வதேச அணியின் கேப்டனிடம் இப்படி ஒரு செயலை யாரும் எதிர்பார்க்கவில்லை.
முன்மாதிரி இருக்க முடியாது
தொழில்நுட்பம் என்பது உங்களின் கையில் இல்லை. லெக் சைடு சென்ற பந்தை, விக்கெட் கீப்பர் பிடித்த போது, நீங்களும் இப்படி தானே நடந்து கொண்டீர்கள். அப்போது எல்கர் இந்த மாதிரி நடந்து கொள்ளவில்லை. கோலி என்ன பேசினாலும், அவரது செயல் மிகைப்படுத்தப்பட்டது போல இருக்கிறது. ஒரு போதும், நீங்கள் முன் மாதிரியாக இருக்க முடியாது.
இதை நான் எதிர்பார்க்கவில்லை
வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் யாரும், கோலியின் இந்த செயலை விரும்ப மாட்டார்கள். இந்த டெஸ்ட் போட்டியில் , என்ன முடிவு வேண்டுமானாலும் வரட்டும். இந்திய அணியை நீண்ட காலமாக வழி நடத்தி வரும் ஒருவரிடம், இப்படி ஒரு செயலை நான் எதிர்பார்க்கவில்லை.
டிராவிட் முடிவு செய்ய வேண்டும்
கோலியின் இந்த செயல்பாடு பற்றி, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், நிச்சயம் கலந்து பேசுவார் என நம்புகிறேன். ஏனென்றால், டிராவிட் கேப்டனாக இருந்த சமயத்தில், இப்படி ஒன்றும் மோசமாக நடந்து கொண்டதில்லை' என மிகவும் காட்டமாக, கோலியின் செயல்பாட்டினை கவுதம் கம்பீர் விமர்சனம் செய்துள்ளார்.