INDVSSA: கடைசி நேரத்தில் கைகொடுத்த அஸ்வின்... சொதப்பிய பேட்ஸ்மேன்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 202 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் காயம் காரணமாக கேப்டன் விராட் கோலி விலகியுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். இதில் மயங்க் அகர்வால் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய புஜாரா 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
இந்த இக்கட்டான சமயத்தில் களமிறங்கிய ரஹானே கை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வந்த இளம் வீரர் ஹனுமா விஹாரி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரிஷப் பண்ட் 17 ரன்களிலும், தாக்கூர் ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். ஷமி 9 ரன்கள் எடுத்து அவுட்டானார். இருப்பினும் அஷ்வின் சிறப்பாக விளையாடினார். 50 பந்துகளில் 46 ரன்களை குவித்து அசத்தினார். 63.1 ஓவர்கள் முடிவில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்களை எடுத்து இருந்தது.
தற்போது தென் ஆப்பிரிக்க அணி தனது பேட்டிங்கை தொடங்கி உள்ளது. 18 ஓவர்களுக்கு தென் ஆப்பிரிக்க அணி 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.

மற்ற செய்திகள்
