‘என் வாழ்க்கையை படமா எடுக்க சில இயக்குநர்கள் கேட்டாங்க’.. நடராஜன் சொன்ன ருசிகர பதில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதனது வாழ்க்கையை படமாக எடுக்க சில இயக்குநர்கள் தன்னை அணுகியதாக தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

நடந்துமுடிந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியினருடன் வலைப்பயிற்சி பவுலராக சென்ற இடதுகை வேகப்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த நடராஜன், அந்த தொடரில் ஒருநாள், 20 ஓவர், டெஸ்ட் போட்டி என மூன்று வகையான தொடரிலும் அறிமுகமானார். மேலும் தனது சிறப்பான பந்துவீச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய நடராஜன், ‘ஐபிஎல் போட்டியில் இருந்து கடந்த 6 மாதம் ஓய்வு இல்லாமல் விளையாடி இருக்கிறேன். தற்போது எனக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சில நாட்கள் ஓய்வு கொடுத்தார்கள். ஓய்வு முடிந்து இன்று (நேற்று) முதல் மீண்டும் பயிற்சியை தொடங்கியுள்ளேன். எனது உடல் வலிமையில் ஏற்றம் காண என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறது.
அடுத்த 3 வாரம் என்ன பயிற்சி செய்ய வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள். அதை செய்ய இருக்கிறேன். சென்னையில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடாமல் இருப்பது சற்று வருத்தமாகதான் உள்ளது.
ஆஸ்திரேலிய தொடரில் நெட் பவுலராக செயல்படுகையில் எனக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தது. ஆனால் அதனை இந்திய கிரிக்கெட் வாரியம் நல்ல முறையில் கையாண்டது. ஐபிஎல் போட்டி முதல் ஆஸ்திரேலிய தொடரில் ஒருநாள் மற்றும் டி20 போட்டி வரையில் மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினேன். ஆனால் டெஸ்டில் என் பந்து வீச்சு வேகம் குறைந்துவிட்டது. இதற்கு எனது உடல் வலிமை குறைந்தது காரணமாக இருக்கலாம்.
விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) அனுமதி அளித்தால் தமிழக அணிக்காக விளையாடுவேன். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி கிடைக்காததால் சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் விளையாடவில்லை.
ஐபிஎல் போட்டிக்கு முன்பு விராட் கோலி, டிவில்லியர்ஸ், தோனி போன்ற வீரர்களின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பது கனவாக இருந்தது. கடந்த ஐபிஎல் தொடரில் அவர்களது விக்கெட்டை கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அதனை நினைத்து பல நாட்கள் தூக்கம் வந்ததில்லை.
ஆஸ்திரேலிய தொடர் முடிந்து ஊருக்கு வந்த பிறகு இன்னும் கூட ரசிகர்கள் பலர் என்னை பார்க்க வீட்டுக்கு வருகிறார்கள். அது மகிழ்ச்சியாக இருந்தாலும், வித்தியாசமான அனுபவமாக உள்ளது. தற்போது வெளியில் கூட போக முடியவில்லை. முன்பு போல் இயல்பாக வெளியில் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
பழனி கோவிலுக்கு சென்று மொட்டை போட்டு விட்டு திரும்பும் போது கூட பலரும் என்னை அடையாளம் கண்டு பாராட்டினார்கள். நான் எப்பொழுதும் சாதாரணமான மனிதனாக இருக்கவே விரும்புகிறேன். எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க இயக்குநர்கள் சிலர் வீடு தேடி வந்தனர். ஆனால் இப்போது எனக்கு அதில் ஆர்வம் இல்லை. கிரிக்கெட்டில் முழு கவனத்தையும் செலுத்தவே விரும்புகிறேன்.
2015-ம் ஆண்டில் எனது பந்து வீச்சு சந்தேகத்துக்குள்ளாகி தடை விதிக்கப்பட்ட போது வாழ்க்கையே முடிந்து விட்டது என நினைத்தேன். மனதளவில் வெகுவாக பாதிக்கப்பட்டேன். அப்போது எனக்கு நண்பர்களும், பயிற்சியாளர்களும் உத்வேகம் அளித்தனர்.
தமிழக அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் சுப்பிரமணியம் எனது பந்துவீச்சை சரி செய்ய உதவிகரமாக இருந்தார். அவரது அறிவுரையை பின்பற்றி கடுமையாக உழைத்தேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. மூன்று வடிவிலான போட்டியிலும் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே எனது லட்சியம்’ என நடராஜன் தெரிவித்துள்ளார்.
News Credits: The Times Of India

மற்ற செய்திகள்
