“ப்ராக்டீஸ் வந்த முதல் நாளே தோனி கொடுத்த அட்வைஸ் இதுதான்”.. சிஎஸ்கேவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் சொன்ன சூப்பர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கொடுத்த அட்வைஸ் குறித்து இளம் வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26-ம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் நடந்து முடிந்த மெகா ஐபிஎல் ஏலத்தில் இளம் வீரர்கள் சிலரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது. அதில் குறிப்பாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற ஆல்ரவுண்டர் ராஜ்வர்தன் ஹங்கர்சேகரை 1.5 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்கியது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஈர்த்திருந்தார்.
இந்த நிலையில் கேப்டன் தோனி கொடுத்த அறிவுரை குறித்து ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் கலந்துரையாடல் ஒன்றை இந்தியா சிமெண்ட்ஸ் ஏற்பாடு செய்திருந்தது. இதில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, புதிதாக சிஎஸ்கே அணியில் இணைந்த இளம் வீரர்களான ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் மற்றும் சிவம் துபே ஆகியோர் கலந்து கொண்டனர். காணொளி காட்சி மூலம் நடந்த இந்த உரையாடலில் ரசிகர்கள் பலர் வீரர்களிடம் கேள்வி எழுப்பினர்.
அப்போது ரசிகர் ஒருவர், தோனி என்ன கொடுத்த அட்வைஸ் என்று ராஜ்வர்தன் ஹங்கர்கேகரிடம் கேள்வி கேட்டார். அவர் பதிலுக்கு முன்னே குறும்பாக குறுக்கிட்ட தோனி, ‘இவரை கால்பந்து திறமைகளை நன்றாக வளர்த்துக்கொள்ள சொல்லி இருக்கிறோம்’ என சிரித்துக்கொண்டே கூறினார்.
இதனை அடுத்து பேசிய ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ‘பயிற்சியின் முதல் நாள் தோனி என்னிடம் வந்து, நீங்கள் ஏற்கனவே என்ன செய்து கொண்டிருந்தீர்களோ அதையே தொடர்ந்து செய்யுங்கள். எதையும் மாற்ற வேண்டாம். என்ன வேண்டுமானாலும் சுதந்திரமாக முயற்சி செய்து பாருங்கள். யாரும் தடை போட மாட்டார்கள் எனக் கூறினார். இது எனக்கு ஒரு நல்ல அட்வைஸ் ஆக இருந்தது. இதனால் நான் செய்ய விரும்புவதை சுதந்திரமாக செய்ய முடிகிறது’ என அவர் கூறியுள்ளார்.