விஜய் சங்கர் விக்கெட் எடுக்கும் முன் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் என்ன சொன்னாங்க..? சீக்ரெட்டை சொன்ன சாஹல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிஜய் சங்கர் விக்கெட்டை விழ்த்தியது குறித்து பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 3-வது போட்டி நேற்று (21.09.2020) பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக அறிமுக வீரர் படிக்கல் 56 ரன்களும் எபி டிவில்லியர்ஸ் 51 ரன்களும் அடித்தனர்.
இதனை அடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே குவித்தது. இதில் அதிகபட்சமாக பேர்ஸ்டோ 61 ரன்கள் குவித்தார். இதனால் பெங்களூரு அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசிய சாஹல் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் சாஹலுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.
போட்டி முடிந்த பின் பேசிய சாஹல், ‘முதல் ஓவரில் இருந்து நான் பந்து வீசும்போது ஸ்டம்ப் டு ஸ்டம்ப் பந்துவீச தீர்மானித்தேன். ஏனெனில் சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வந்தனர். அதனால் அவர்களுக்கு எதிராக ஒரு அழுத்தத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு பந்துவீசினேன். அப்போது பேர்ஸ்டோ விக்கெட்டை வீழ்த்தியது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் விஜய் சங்கர் பேட்டிங் செய்ய வந்தார். அவர் இறங்கும் முன்னர் விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகிய இருவரும் என்னிடம் வந்து அவருக்கு எதிராக முதல் பந்தை கூக்ளியாக வீசு என்று கூறினார்கள். அவர்கள் கூறியது போலவே கூக்ளி பந்தை வீசினேன் அந்த பந்து விக்கெட் எடுத்துக் கொடுத்தது’ என்று சாஹல் கூறினார்.

மற்ற செய்திகள்
