'இப்படி ஒரு குறைய வச்சுகிட்டு... இந்திய அணி எப்படி சமாளிக்க போகுது'?.. ஆட்டத்தின் போக்கை மாற்றப் போகும் அந்த வீரர் யார்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவரலாற்று சிறப்புமிக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணிக்கு மிகப்பெரும் சவால் ஒன்று காத்திருக்கிறது.
இங்கிலாந்தில் நடைபெறும் இந்த போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது இந்தியா. தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கம் என சொல்லப்படும் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணிக்கு சரியான ஆல் ரவுண்டர் இல்லாதது தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:-
விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரோகித் ஷர்மா, சுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அஷ்வின், உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், கே.எல்.ராகுல் மற்றும் சாஹா (விக்கெட் கீப்பர்). இதில் கே.எல்.ராகுல் மற்றும் சாஹா தங்களது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டி உள்ளது.
வரும் ஜூன் 2ஆம் தேதியன்று இந்திய அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. செப்டம்பர் மாதத்தில் தான் அணி வீரர்கள் இந்தியாவுக்கு திரும்புவார்கள்.
அணியில் இடம் பெற்றுள்ள ஆல் ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஷ்வின் என நான்கு பேரும் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள். இதில் அக்சர் மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு இது தான் முதல் இங்கிலாந்து சுற்றுப்பயணம். மறுபக்கம் இந்தியாவின் பிரதான ஆல் ரவுண்டரான ஜடேஜா இங்கிலாந்தில் இதுவரை ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 2 அரை சதங்கள் மற்றும் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அஷ்வின் ஆறு போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
SENA நாடுகள் என சொல்லப்படும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் உள்ள நாடுகளான தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் மொத்தம் 63 விக்கெட்டுகளை தான் அஷ்வின் கைபற்றியுள்ளார். இதில் ஆஸ்திரேலியாவில் தான் 39 விக்கெட்டுகளை அஷ்வின் எடுத்துள்ளார்.
இப்போதைய சூழலில், இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தனது திறனை ஆஸ்திரேலியா தொடரில் அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார். அதனால் அவரை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக அணியின் தேர்வாளர்கள் பரிசீலிக்க கூடும் என இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் PTI உடனான உரையாடலில் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் மைதானத்தில் தாக்கூர் அரைசதம் விளாசியதோடு 7 விக்கெட்டுகளையும் கைபற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கடைசியாக 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா இடம் பெற்றிருந்தார். அந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடி ஒரு அரை சதம் மற்றும் பத்து விக்கெட்டுகளையும் அவர் கைபற்றி இருந்தார். ட்ரெண்ட் பிரிட்ஜ் போட்டியில் 5 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தி இருந்தார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பாண்டியா அதிகம் பந்து வீசுவதில்லை. அதனால் இந்த முறை இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவர் விளையாட வில்லை.
இந்த ஆல் ரவுண்டர் சிக்கலை தீர்க்க இந்திய அணியின் பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் அவரவர் பணியை சிறப்பாக செய்ய வேண்டி உள்ளது. ரோகித், விராட், ரஹானே, புஜாராவின் அனுபவம் பேட்டிங்கில் இந்திய அணியின் பலம். இளம் வீரர்களான கில் தொடக்க வீரராகவும், பண்ட் லோயர் மிடில் ஆர்டரிலும் விளையாட வாய்ப்புகள் அதிகம். இஷாந்த், பும்ரா, ஷமி பவுலிங்க் தரப்பில் இந்தியாவின் பலம். ஜடேஜா மற்றும் அஷ்வினும் அவர்களது பணியை திறம்பட செய்ய வேண்டி உள்ளது. இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் வேண்டாம் என அணி நிர்வாகம் நினைத்தால் தாக்கூர் விளையாடுவது உறுதி.
நியூசிலாந்து அணியில் கொலின் டி கிரான்ஹோம் உட்பட சில கணிசமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். இங்கிலாந்து அணியிலும் இந்த சீம் ஆல் ரவுண்டர்களுக்கு பஞ்சம் இல்லை.