பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘தாதா’ வாழ்க்கை வரலாறு.. ஹீரோ இவர்தானா..? எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி மற்றும் முகமது அசாருதீன் ஆகியோரை தொடர்ந்து சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது. இதற்கு கங்குலி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க உள்ளதாகவும், 200 முதல் 250 கோடி ரூபாய் முதலீட்டில் பெரிய பட்ஜெட் படமாக உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து நியூஸ் 18 சேனலுக்கு பேட்டியளித்த சவுரவ் கங்குலி, ‘ஆம், என் சுயசரிதையை படமாக்க ஒப்புக்கொண்டுள்ளேன். இது இந்தியில் படமாக உள்ளது. ஆனால் இயக்குனரின் பெயரை தற்போது வெளியிட முடியாது. எல்லாம் இறுதி செய்ய இன்னும் சிறிது காலம் ஆகும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, படத்திற்கான கதை எழுதப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது சவுரவ் கங்குலியின் இளம் வயது கிரிக்கெட் பயணம் முதல், இந்திய அணியின் கேப்டன் ஆனது, லார்ட்ஸ் மைதானத்தில் இவர் தலைமையிலான இந்திய அணி பெற்ற வரலாற்று வெற்றி மற்றும் பிசிசிஐ தலைவரானது வரை இடம்பெறும் என தெரிகிறது. இந்திய கிரிக்கெட்டின் ‘தாதா’ என அழைக்கப்படும் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.