‘நீங்களே இப்படி பண்ணலாமா..?’ முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜாவுக்கு ‘அபராதம்’ விதித்த பஞ்சாயத்து தலைவர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜாவுக்கு கிராம பஞ்சாயத்து தலைவர் அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா, மேட்ச் பிக்ஸிங்கில் சிக்கிய பின் கிரிக்கெட் இருந்து ஒதுங்கினார். இதனை அடுத்து சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டிய அவர், 2003-ல் வெளியான ‘கேல்’ என்ற பாலிவுட் படத்தில் நடித்து இருந்தார். இதன்பின்னர் ‘பல் பல் தில்கே சாத்’ மற்றும் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் உடன் ‘கை போ ச்சே’ உள்ளிட்ட படங்களில் அஜய் ஜடேஜா நடித்துள்ளார்.
இந்த நிலையில் கோவாவின் ஆல்டோனா கிராமத்தில் வீடு வைத்திருக்கும் அஜய் ஜடேஜா, பக்கத்து கிராமமான நாச்சினோலாவில் குப்பைகளை கொட்டியுள்ளார். இதனால் அந்த கிராமத்து பஞ்சாயத்து தலைவர் துருபி பந்தோட்கர், அஜய் ஜடேஜாவுக்கு ரூ.5000 அபராதம் விதித்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த துருபி பந்தோட்கர், ‘எங்கள் கிராமத்தில் குப்பை பிரச்சனையால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறோம். வெளியில் இருந்து பலரும் இங்கே குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அவர்களை அடையாளம் காண சில இளைஞர்களை நியமித்துள்ளோம். அப்போது, அஜய் ஜடேஜா என்ற பெயரில் சில பைகளில் குப்பைகள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். உடனே நேரடியாக அவரிடம் சென்று இதுதொடர்பாக கூறினோம்.
அப்போது அவர் அபராதம் செலுத்த தயாராக இருப்பதாக கூறினார். மேலும் எதிர்காலத்தில் இதுபோல் குப்பைகளை கொட்ட வேண்டாம் என அவரிடம் வலியுறுத்தியுள்ளோம். ஒரு கிரிக்கெட் வீரர் இங்கு தங்கியிருப்பது எங்களுக்கு பெருமைதான். ஆனால் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அவர்களே இப்படி தவறு செய்யலாமா..?’ என பஞ்சாயத்து தலைவர் துருபி பந்தோட்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்ற செய்திகள்
