“இதெல்லாம் ரொம்ப தப்புங்க… நாங்கலாம் இப்படியா பண்ணோம்”- வார்னரை குத்திக்காட்டும் முன்னாள் சிஎஸ்கே வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடரில் இரண்டாம் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முகமது ஹஃபீஸ் வீசய பந்தில் வார்னர் அடித்த ஒரு ஷாட் தான் தற்போது இரண்டு நாட்களுக்கும் மேலாக வைரலாகி வருகிறது. இதுகுறித்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் அஸ்வின் ஒரு ட்வீட் செய்ய அதைத் தொடர்ந்து தற்போது இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த மற்றும் முன்னாள் சிஸ்கே வீரர் ஆன ஹர்பஜன் சிங் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.
வார்னர் அடித்த அந்த சிக்ஸ், விதிப்படி தவறு ஒன்றும் இல்லை என்றாலும் வார்னரின் செயல் கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கு எதிரானது என ட்விட்டரில் விமர்சனம் செய்து வேகப்பந்து வீச்சாளர் அஸ்வினையும் டேக் செய்து இருந்தார் கவுதம் கம்பீர். மேலும், “ஷேன் வார்னே எல்லாம் அனைத்து விதமாகவும் கமென்ட் செய்வார். எல்லாவற்றையும் ட்வீட் செய்வார்.
கிரிக்கெட் ஆட்ட உணர்வு குறித்து ரிக்கி பாண்டிங் பெரிய விதமாகப் பேசுவார். இதைப் பற்றி அவர்கள் என்ன சொல்வார்கள்? அஸ்வின் மன்கட் செய்த போது இவர்கள் பெரிதாகப் பேசினார்கள். இன்று வார்னர் குறித்து வார்னே என்ன சொல்லப் போகிறார்? மற்றவர்கள் குறித்துப் பேசுவது எளிதானது, நம் அணியைச் சேர்ந்தவர்கள் குறித்துப் பேசுவதுதான் கடினம்” என்றும் வார்னர் விவகாரம் குறித்துப் பேசி உள்ளார்.
கம்பீரின் இந்த ட்வீட்டுக்கு ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் பீட்டர் லாலோர், “தவறானது கம்பீர்” எனக் குறிப்பிட்டு அஸ்வினையும் டேக் செய்திருந்தார். அதற்கு அஸ்வின் தனது பாணியிலேயே, “அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், இது ரைட்டுனா, அதுவும் ரைட்டு. அது தவறுன்னா இதுவும் தவறு. நியாயம் தானே?” என்று கம்பீருக்கு ஆதரவாகப் பதிவிட்டு இருந்தார்.
அஸ்வினைத் தொடர்ந்து தற்போது ஹர்பஜன் சிங், வார்னரின் கிரிக்கெட் ஆட்ட உணர்வு குறித்து விமர்சனம் செய்துள்ளார். ஹர்பஜன், “வார்னரின் ஷாட் கிரிக்கெட் விதிமுறையின் கீழ் சரியானதுதான், ஆனால் இது போன்று நடந்து இருக்கக்கூடாது. அவரின் இந்த செயல் ஒரு நல்ல விஷயத்தை சொல்லாது. கடந்த காலங்களில் எங்களுக்கும் இது போன்ற வாய்ப்புகள் எல்லாம் அமைந்துள்ளன. ஆனால், நாங்கள் அப்படிச் செய்யவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.