"என்ன மாதிரி 'கேப்டன்சி'ங்க இது??.. சத்தியமா என்னால புரிஞ்சுக்கவே முடியல.." கேள்விகளால் துளைத்து எடுத்த 'ஆகாஷ் சோப்ரா'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசனின் இன்றைய போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மும்பை மைதானத்தில் மோதுகின்றன.
முன்னதாக, நேற்று நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா அணியை வீழ்த்தி, மூன்றாவது வெற்றியை பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 220 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி, தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், ரசல், தினேஷ் கார்த்திக் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் சென்னை அணிக்கு சற்று நெருக்கடி கொடுத்தனர். இருந்த போதும் கைவசம் விக்கெட்டுகள் இல்லாததால், சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள கொல்கத்தா அணி, ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இதனிடையே, கொல்கத்தா கேப்டன் மோர்கனின் கேப்டன்சி கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின் போது, பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்த முறையில், மோர்கனை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் கம்பீர்.
இந்நிலையில், சென்னை அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா (Aakash Chopra), மோர்கனின் கேப்டன்சி குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார். 'இயான் மோர்கனின் கேப்டன்சி பற்றி என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஏனென்றால், கொல்கத்தா அணி மட்டும் தான் பவர் பிளேவில் சுழற்பந்து வீச்சாளர்களை அதிகம் பயன்படுத்துகிறது.
மற்ற அணிகள் எல்லாம், வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்திக் கொண்டு, விக்கெட்டுகளை எடுக்கிறது. நேற்றைய போட்டியில் கூட, சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், பவர் பிளேவில் பந்து வீசி, விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். கொல்கத்தா அணியில் முதலில் வருண் சக்ரவர்த்தி பந்து வீசினார்.
அதன் பிறகு, சுனில் நரைன் பந்து வீச வந்தார். பவர் பிளேவில் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசுவது என்பது வித்தியாசமான ஆலோசனை தான். ஆனால், அது எதற்காக என்பது தான் எனக்கு புரியவில்லை' என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
பவர் பிளேவில் சுழற்பந்து வீச்சாளர்களை கொல்கத்தா அணி பயன்படுத்திய நிலையில், இதனை சாதகமாக்கிக் கொண்ட சென்னை அணியின் தொடக்க ஜோடி, சிறப்பாக ஆடி ரன் குவித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.