நோயெதிர்ப்பு சக்தி எக்கச்சக்கம்... 'வெயிட்'டும் நல்லா கொறையும்... 'இந்த' குழம்புல இத்தனை நல்ல விஷயம் இருக்கா?
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்தற்போதைய கொரோனா காலகட்டத்தில் மக்கள் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும் உணவு பொருட்களை தேடித்தேடி வாங்கி சாப்பிட ஆரம்பித்து இருக்கின்றனர். குறிப்பாக இஞ்சி டீ, விதவிதமான சூப்கள், இயற்கை வழியிலான பொருட்கள் ஆகியவற்றில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய பூண்டு குழம்பு எப்படி செய்வது என பார்க்கலாம். பூண்டை தொடர்ந்து உணவில் சேர்த்து கொண்டால் உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம். அதோடு ஆண்களுக்கு பாலியல் சக்தியை அதிகரிக்கும் வல்லமை பூண்டுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
தேவையான பொருட்கள்
பூண்டு - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2 (பெரியது)
வெந்தய பொடி - 1/2 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
புளி - 1 எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 50 கிராம்
சமையல் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டுகளை சேர்த்து சற்று பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை போட்டு வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள், சிறிது தண்ணீர் (அதிக அளவு ஊற்றி விட வேண்டாம்) மற்றும் வேண்டிய அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
குழம்பானது நன்கு கொதித்ததும், கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்து ஓரளவு கெட்டியானதும், அதில் நல்லெண்ணெயை ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கி விடவும். இப்போது சுவையான பூண்டு குழம்பு தயார்!