'சுஷாந்த் வழக்கில் திடீர் திருப்பமாக'... 'ரியா வீட்டில் அதிரடி சோதனை'... 'போதைப்பொருள் வழக்கில்'... 'சகோதரர் சோவிக் கைதால் பரபரப்பு!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாபோதைப்பொருள் வழக்கில் நடிகை ரியாவின் சகோதரர் மற்றும் நடிகர் சுஷாந்த் சிங்கின் உதவியாளர் இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டுதல், பணமோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவருடைய காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் பணமோசடி தொடர்பாக நடிகை ரியா மற்றும் அவருடைய சகோதரர் சோவிக் ஆகியோரிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், அவர்களின் வாட்ஸ் அப் உரையாடல்கள் மூலம் போதைப்பொருள் கும்பலுடன் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து என்சிபி எனப்படும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் இதுதொடர்பான வழக்கை கையில் எடுத்து விசாரிக்க தொடங்கி, போதைப்பொருள் சப்ளை தொடர்பாக ஜாயித் விலாத்ரா மற்றும் அப்தேல் பாசித் பரிதார் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் காசிம் இப்ராகிம் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். அதில், கைதான அப்தேல் பாசித் பரிதார், நடிகை ரியா மற்றும் அவருடைய சகோதரர் சோவிக்குடன் செல்போன் உரையாடலில் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து திடீரென நேற்று காலை 6.30 மணி அளவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மும்பை சாந்தாகுருசில் உள்ள சோவிக் வீட்டில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அதே வீட்டில் தான் நடிகை ரியாவும் வசித்து வரும் நிலையில், சோதனையில் சில பெண் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். அதே நேரத்தில் அந்தேரியில் உள்ள சுஷாந்த் சிங்கின் உதவியாளர் சாமுவேல் மிரண்டா வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இவருக்கு போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்களின் போன் நம்பரை சோவிக் கொடுத்ததாக கூறப்படும் நிலையில், ஒரே நேரத்தில் இருவருடைய வீட்டிலும் சோதனை நடதத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து சோவிக் மற்றும் சாமுவேல் மிரண்டா ஆகிய இருவரையும் பல்லர்டு எஸ்டேட் பகுதியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல அலுவலகத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். தொடர் விசாரணைக்கு பிறகு இரவு 9 மணியளவில் சோவிக் மற்றும் சாமுவேல் மிரண்டா இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் வழக்கில் ஏற்கனவே நடிகை ரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சூழலில் அவரையும் இன்று (சனிக்கிழமை) விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு உயர் அதிகாரி ஒருவர், "வழக்குக்கு தேவையான கூடுதல் ஆதாரங்களை திரட்டுவதற்காக சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.