யாருப்பா இவரு? இந்த வயசுலையே ரத்தன் டாடாவோட நெருங்கிய நண்பராக எப்படி வாய்ப்பு கிடைச்சுது?
முகப்பு > செய்திகள் > இந்தியாரத்தன் டாடாவுடன் ஒரு இளைஞர் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்கள் வெளியான நிலையில் யார் இவர் என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது.

இந்தியாவின் மிக சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராக கருதப்படும் தொழிலதிபர் ரத்தன் டாடா உள்ளார். அவரது உதவியாளராக 28 வயதாகும் இளைஞர் ஷாந்தனு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள நட்பு சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டைப் பெற்று வருகிறது.
யார் இந்த ஷாந்தனு?
தற்சமயம் டாடா குழுமம் ஸ்டார்ட் அப் எனப்படும் புதிய தொழில்கள் தொடங்குவதற்கு ஏராளமானோருக்கு வாய்ப்பு அளித்து வருகிறது. டாடாவின் இந்த திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டு வருபவர் ஷாந்தனு.
அமெரிக்காவின் நியூயார்க்கில் செயல்பட்டு வரும் கார்னெல் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பை ஷாந்தனு முடித்துள்ளார். அவரது குடும்பத்தில் டாடா குழுமத்தில் நான்கு தலைமுறைகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர் ஐந்தாவது தலைமுறை.
ஆன்லைன் கருத்தரங்கம்:
ரத்தன் டாடாவுடன் நெருக்கமாக நட்போடு பழகும் இந்த இளைஞர் யார் என்கிற கேள்வி மக்களிடையே எழுந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் வெபினார் முறையில் ஆன்லைன் கருத்தரங்கத்தை ஷாந்தனு நடத்துகிறார். இதற்காக ரூ. 500 யை ஒவ்வொரு பங்கேற்பாளர்களிடமும் பெற்றுக் கொள்கிறார். இந்த கருத்தரங்கத்தில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெபினாரில் திரட்டப்படும் பணம், ஷாந்தனுவின் மோட்டோ பாவ்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டு வருகிறது.
கவன ஈர்ப்பு:
இந்த நிறுவனம், நாய்களுக்கென பிரத்யேக ஆடைகள், உபகரணங்களை தயாரித்து வழங்குகிறது. 20 இந்திய நகரங்கள் மற்றும் 4 வெளிநாடுகளில் மோட்டோ பாவ்ஸின் கிளை நிறுவனம் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. மோட்டோ பாவ்ஸ் குறித்த செய்தி, டாடா குழுமம் வெளியிடும் செய்தி அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. இதைப் படித்துப் பார்த்த ரத்தன் டாடாவுக்கு ஷாந்தனு மீது கவனம் குவிந்தது. ஏனெனில் ஷாந்தனுவைப் போன்று டாடாவுக்கு நாய்கள் மீது ஈர்ப்பு அதிகமாகும்.
நண்பர் போல் பழகுதல்:
அதன் பிறகு, ரத்தன் டாடாவுக்கு ஷாந்தனு கடிதம் எழுத, அவரும் அதை படித்துப் பார்த்துவிட்டு சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கியுள்ளார். சந்திப்புக்கு பின்னர் மோட்டோ பாவ்ஸ் நிறுவனத்தில் டாடா முதலீடு செய்தது. தற்போது நல்ல லாபம் கிடைக்கும் நிறுவனமாக மோட்டோ பாவ்ஸ் வளர்ந்துள்ளது.
2018-ல் டாடாவில் ஷாந்தனு பணிக்கு சேர்ந்தார். தற்போது அவர் ரத்தன் டாடாவின் உதவியாளராக உள்ளார். 81 வயதாகும் ரத்தன் டாடா, 28 வயதாகும் ஷாந்தனுவிடம் நண்பரைப் போன்று பழகி தினசரி அப்டேட்டுகளை அறிந்துக் கொண்டுள்ளார்.

மற்ற செய்திகள்
