"விடாது துரத்தும் சர்ச்சை!".. நடிகை கங்கணா, ரங்கோலி சகோதரிகள் மீது பாய்ந்த வழக்கு!.. நேரில் ஆஜராக சம்மன் அனுப்பிய போலீஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலம், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக பேசியதுடன், மும்பை போலீசாரை மாஃபியாக்களுடன் ஒப்பிட்டு பேசிய பிரபல பாலிவுட் நடிகை கங்கணாவின் கருத்து சர்ச்சைக்குள்ளாகியது. இதற்கு கண்டனம் தெரிவித்த மகாராஷ்டிர அரசு சட்டவிரோதமாக கட்டப்பட கங்கணாவின் மும்பை அலுவலக பகுதியை இடித்தது. ஆனாலும், கங்கணாவுக்கு இமாச்சல அரசு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கியதை அடுத்து, கங்கனா மீண்டும் மகாராஷ்டிரா வந்தார்.
தற்போது தனது சொந்த மாநிலமான இமாச்சலபிரதேசம் வசித்து வரும் கங்கணா பாலிவுட்டில் போதைப்பொருள் புழக்கம் , பிரான்ஸ் நாட்டின் பாரிசில் வரலாற்று ஆசிரியர் சாமுவேல் கொல்லப்பட்டது உள்ளிட்டவை தொடர்ப ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். கங்கணாவுடன் அவரது சகோதரி ரங்கோலி சந்தலும், சமூகவலைதளத்தில் கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் இவர்கள் இருவரின் பதிவுகள் அனைத்தும் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, மும்பையில் உள்ள பாந்திரா மாஜிஸ்திரேட் மெட்ரோபொலிட்டன் நீதிமன்றத்தில் ஷகில் அஷ்ரப் அலி சயத் என்பவர் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கங்கணா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதனால் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124 ஏ, 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் கங்கணா ரனாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல் ஆகிய 2 பேர் மீதும் மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக, பாந்திரா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருவரும் வரும் 10-ம் தேதிக்குள் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று மும்பை போலீஸ் இவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.