'கடைசியா என் மகனுக்கு புடிச்ச சாப்பாடு குடுக்கணும்' ... இறுதி வாய்ப்பு ஒன்று கேட்கும் ... நிர்பயா குற்றவாளியின் தாய்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Mar 19, 2020 07:35 PM

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நான்கு பேருக்கு நாளை காலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில், குற்றவாளிகளில் ஒருவனான வினய் ஷர்மாவின் தாயார் தனது மகனுக்கு பிடித்த உணவை இறுதியாக வழங்க அனுமதி கேட்டுள்ளார்.

One of the Nirbaya Convicts mother asking permission

கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவரை ஆறு பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து நடுரோட்டில் வீசியது. இதில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின் வழக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேருக்கு நாளை காலை திஹார் ஜெயிலில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்த போது நான்கு பேர் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் தூக்குத்தண்டனையை தடை செய்யக் கோரி குடியரசு தலைவரிடம் மனுவளித்தனர். இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட நாளை காலை ஐந்தரை மணிக்கு திஹார் ஜெயிலில் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான ஆணையை டெல்லி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் இன்று இதற்கான ஒத்திகையும் திஹார் ஜெயிலில் நடைபெற்றது.

இந்நிலையில் தூக்கு தண்டனை குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மாவின் தாயார் இது குறித்து கூறுகையில், 'இங்கு அனைத்தும் இறைவன் நினைத்தபடி தான் நடக்கின்றன. மனிதனின் காட்டுப்பாட்டினுள் இங்கு எதுவுமில்லை. நான் திஹார் ஜெயிலில் பலமுறை என் மகனுக்காக உணவு எடுத்து செல்ல முயன்ற போது அதனை அங்குள்ள அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். இப்போது கடைசியாக என் மகனை பார்க்க அனுமதியளித்தால் என் மகனுக்கு மிகவும் பிடித்தமான பூரி, கச்சோரி போன்ற உணவுகளை கொண்டு செல்வேன்' என தெரிவித்துள்ளார்.

Tags : #NIRBAYA CASE #NEW DELHI