'இந்த பழைய மரத்தடி நிழலே எனக்கு போதும்...' '75 வருசமா இலவச கல்வி...' 'ஒரு பைசா வாங்குனது இல்ல...' - கைநாட்டு போட்டவர்களை கையெழுத்து போட வைத்த மகான்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒடிசா மாநிலத்தில் சுமார் 75 ஆண்டுகளாக ஒரு பைசா பணமும் வாங்காமல் மாணவர்களுக்கு கல்வி கற்று தரும் முதியவரின் கல்விச்சேவையை மக்கள் மனம் நெகிழ்ந்துப் பாராட்டி வருகின்றனர்.

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தா பிராஸ்டி என்னும் முதியவரின் கல்வி சேவை குறித்து தற்போது இணையமெங்கும் வைரலாகி வருகிறது. நந்தா பிராஸ்டி தாத்தா கடந்த 75 ஆண்டுகளாக மரத்தடியில் அமர்ந்தபடி பள்ளி மாணவர்களுக்கு ஒரு பைசாகூட வாங்காமல் பாடம் கற்பித்து வருகிறார்.
மேலும் குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவதற்காக தன் முழுநேரப் பணியை விட்டு விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நந்தா தாத்தாவின் அடையாளமே அவரின் எளிமையான உருவமும், காவி நிற வேட்டியும் துண்டும் சிறு மணி மாலையும் என அப்பகுதி மக்கள் அவரை போற்றி புகழ்கின்றனர்.
மாணவ மாணவியருக்கு மட்டுமல்லாமல், இரவு நேரங்களில் கிராமத்தைச் சேர்ந்த வயதானவர்களுக்கும் அவர் பாடம் சொல்லித்தந்து வருகிறார். நந்தா தாத்தாவின் குறிக்கோளே அப்பகுதியில் இருக்கும் குழந்தைகள் நான்காம் வகுப்பைப் படித்துமுடித்து, பிறகு தொடக்கப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதாம்.
இதுகுறித்து முதியவர் நந்தா பிராஸ்டி கூறும் போது, 'எங்க கிராமத்துல பெரும்பாலான மக்கள் விவசாய நிலங்களில் வேலை செய்றவங்க தான், அவங்களுக்கு அவங்க பெயரைக் கூட எழுத தெரியாது. எல்லாருமே கைநாட்டுதான்.
அவங்க எல்லாரையும் அழைச்சு கையெழுத்துப் போட கற்றுக்கொடுத்தேன். அப்புறம் பகவத் கீதை பற்றி பாடம் நடத்தத் தொடங்கினேன். என்னுடைய முதல் பேட்ச் மாணவர்களின் பேரக் குழந்தைகளுக்கு இப்போது கற்பித்து வருகிறேன்' என பூரிப்போடு கூறியுள்ளார்.
மேலும் பர்தாந்தா கிராமத்தில் குழந்தைகளுக்கு வகுப்புகள் நடத்துவதற்கு ஓர் இடத்தை அமைப்பதற்கு அரசிடம் உதவி கேட்கலாம் என்று ஒருவர் சொன்ன ஆலோசனையை நந்தா மறுத்து விட்டார். அவருக்கு அந்தப் பழைய மரத்தடி நிழலே போதுமானதாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
