‘குடும்பம் வேற, கட்சி வேற’.. தேர்தலில் அம்மாவை எதிர்த்து மகன் போட்டி.. எகிறும் எதிர்பார்ப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் அம்மா, மகன் எதிரெதிர் கட்சியில் நின்று தேர்தலில் போட்டியிடும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பஞ்சவிலா பகுதியை சேர்ந்தவர் சுதர்மா தேவராஜன். இவரது குடும்பம் நீண்ட நாள்களாக பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சுதர்மாவின் அப்பா ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்த சுதர்மா, வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் 335 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
இவருடைய மகன் தினுராஜ். இவர் பள்ளிப்பருவத்தில் இருந்தே இந்திய மாணவர் கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்துள்ளார். பள்ளிப்படிப்பை வயநாட்டில் முடித்தவுடன், சொந்த ஊரான எடமுலாக்கலுக்கு வந்ததும், இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பில் சேர்ந்துள்ளார். கொரோனா காலத்தில் அந்த அமைப்பின் மூலம் சமையல் வேலையில் இறங்கி, ஏழை மக்களுக்கு தொடர்ந்து சாப்பாடு கொடுத்து வந்துள்ளார். அதனால் அவரது சேவையை பாராட்டி இந்தமுறை சிபிஐ(எம்) கட்சி சார்பில் பஞ்சவிலா வார்டு உறுப்பினர் தேர்தலில் தினுராஜ் நிறுத்தப்பட்டுள்ளார்.
தேர்தலில் தன்னை எதிர்த்து சொந்த மகனே நிற்பது குறித்து தெரிவித்த சுதர்மா, என் மகன் இந்தமுறை தேர்தலில் போட்டியிடுவது தெரிந்தால் நான் பின் வாங்கிவிடுவேன் என நினைத்து அவனை நிறுத்தியுள்ளனர். ஆனால் குடும்பம் வேறு, அரசியல் வேறு. தேர்தலில் அவனை எதிர்த்து போட்டியிடுவதால்,என் மகனுக்கு நான் சாப்பாடு கொடுக்காமல் இருக்கப் போவதில்லை. அவனும் என்னை அம்மா என்று கூப்பிடாமல் இருக்கப்போவதில்லை.
தினுராஜின் அப்பா என்னுடன் ஒருநாள் பிரச்சாரத்தில் கலந்துகொண்டார். ஆனால் என் மகன் வருத்தப்படுவான் என்று அவரை இனிமேல் வரவேண்டாம் எனக் கூறிவிட்டேன். காலை 5-6 மணிக்குள் என் மகன் வீட்டை விட்டு சென்றுவிடுவான். தேர்தல் நெருங்கி வருவதால் தன்னை சந்திக்க வருபவர்கள் சங்கடப்படக்கூடாது என்பதற்காக, தேர்தல் முடியும் வரை உறவினர் ஒருவரின் வீட்டில் தனியாக வசித்து வருகிறான் என சுதர்மா தெரிவித்துள்ளார். அம்மா, மகன் எதிரெதிர் கட்சியில் போட்டியிடுவதால் யார் ஜெயிக்க போகிறார்கள்? என கேரளாவில் பரபரப்பை எகிற வைத்துள்ளது.