ரயிலில் ‘சொகுசு மசாஜ்’ சேவை..! கோல்டு, டைமண்ட், பிளாட்டினம் என மூன்று வகை..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Jun 09, 2019 12:17 AM
இந்தியன் ரயில்வே பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வரிசையில் புதிதாக இனி ரயில் பயணங்களில் மசாஜ் சேவையை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. ரயில் பயணத்தின்போது பயணிகளுக்கு தலை மற்றும் பாதங்களுக்கு மட்டும் மசாஜ் செய்யப்படும். இதற்காக ஐ.டி கார்டுடன் 5 மசாஜ் சேவகர்கள் ஒவ்வொரு ரயிலிலும் பணியமர்த்தப்பட உள்ளனர். கோல்டு, டைமண்ட், பிளாட்டினம் என மூன்று வகைகளில் செய்யப்படும் இந்த மசாஜ்களுக்கு 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆக்கப்பூர்வமாக வருமானத்தை எப்படிப் பெருக்கலாம் என ஊழியர்களிடம் கேட்டுள்ளது இந்தியன் ரயில்வே. அதற்கு வந்த ஆலோசனைகளிலிருந்தே இந்த மசாஜ் சேவை ஐடியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 முதல் 15 நாட்களில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் ஆண்டுக்கு 20 லட்சம் கூடுதல் வருமானமும், பயணிகளின் எண்ணிக்கை 90 லட்சமாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்கட்டமாக மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து புறப்படும் 39 ரயில்களில் இந்த சேவை தொடங்கப்பட உள்ளது. அதற்கான வரவேற்பைப் பொறுத்து மற்ற ரயில்வே மண்டலங்களிலும் இதை விரிவுபடுத்த முடிவெடுத்துள்ளது இந்தியன் ரயில்வே.
