நாளை மறுதினம் முதல் எந்தந்த ரயில்கள் எல்லாம் ரத்து! ரயில்வே துறையின் மீது மக்கள் அதிருப்தி!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Arunachalam | Apr 03, 2019 10:26 PM

யுகாதி, தமிழ் வருடப் பிறப்பு பண்டிகைகள் மற்றும் தேர்தல் நெருங்கும் சமயத்தில், பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் - தக்கோலம் இடையே சுற்றுவட்ட ரயில் பாதைஅமைக்கும் பணி நடந்து வருவதால், சிக்னல் அமைப்பது, ரயில் தண்டவாளங்களை இணைப்பது உள்ளிட்ட வேலைகள் காரணமாக, நாளை மறுதினம் (5-ம் தேதி) முதல் வரும் 14-ம் தேதி வரை பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், பல ரயில்கள் சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படுவதற்குப் பதிலாக, சோளிங்கர், காட்பாடி, திருத்தணி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் ஏசி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-கோவை சதாப்தி, சென்னை சென்ட்ரல்-திருப்பதி சப்தகிரி, சென்னை சென்ட்ரல்-பெங்களூரூ டபுள் டக்கர், சென்னை சென்ட்ரல்-ஜோலார்பேட்டை ஏலகிரி விரைவு ரயில் ஆகியவை வரும் 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை பல்வேறு நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், சென்னை சென்ட்ரல் - பெங்களூரூ லால்பாக் மற்றும் பெங்களூரூ விரைவு ரயில்கள், வெஸ்ட்கோஸ்ட், தாதர், நவஜீவன் உள்ளிட்ட ரயில்கள் வரும் 5-ம்தேதி முதல் 14-ம் தேதி வரை சென்ட்ரலுக்குப் பதிலாக காட்பாடி, ஜோலார்பேட்டை, சோளிங்கர், திருத்தணி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பண்டிகை சமயத்தில் இவ்வாறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பண்டிகைக்காலம் முடியும் வரை ரயில்கள் ரத்து அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் திரும்பப் பெற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
