'சீன' ஆப்களுக்கு மட்டுமில்ல... இதுக்கும் சேர்த்தே 'ஆப்பு' வச்சிட்டோம்... மத்திய அரசு அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த ஜூன் 15-ம் தேதி இந்தியாவின் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரை நாட்டுக்காக தியாகம் செய்தனர். இதையடுத்து சீன பொருட்கள் மீதான எதிர்ப்பு இந்திய மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றி வருகிறது.
இதற்கு ஆதரவு அளிப்பது போல டிக் டாக், ஹாலோ உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது இந்திய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் வேளையில் அடுத்த அதிரடியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார். அதில், ''இந்தியாவில் சாலை கட்டுமான பணிகளில் கூட்டு திட்டங்களில், சீனா நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது.
இதற்காக மத்திய அரசு உறுதியான முடிவை எடுத்துள்ளது. நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்களை தடை செய்யவும், இந்திய நிறுவனங்களுக்கு விதிகளை தளர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட சில திட்டங்களில் சீன நிறுவனங்கள் இருந்தாலும், இனி வரும் காலங்களில் அதற்கு தடை விதிக்கப்படும். தொழில்நுட்பம், ஆலோசனை மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் கூட்டு திட்டமாக இருந்தாலும், சீன நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம்,'' என தெரிவித்து இருக்கிறார்.