'நீண்ட கியூவில் நிற்கும் பெண்கள்'...'உஷாரான அதிகாரிகள்'...'ஹெல்மெட்' அணிந்து வெங்காயம் விற்பனை!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Nov 30, 2019 12:11 PM
வெங்காயம் விற்கும் போது பாதுகாப்பிற்காக ஹெல்மட் அணிந்து கொண்டு, அதிகாரிகள் விற்பனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில் வெங்காயம் என்பது அவர்களின் தினசரி சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் அதிகப்படியான விலையேற்றத்தை காரணமாக பிகார் மாநில கூட்டுறவு சங்கத்தின் சார்பாக மலிவு விலையில் மக்களுக்கு வெங்காயம் வழங்கப்படுகிறது.
மலிவு விலையில் வழங்கப்படும் வெங்காயத்தை வாங்குவதற்காக அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, மக்களை வரிசைப்படுத்தி அவர்களுக்கு வெங்காயத்தை விற்பனை செய்கிறார்கள். மக்களின் கூட்டம் அதிகப்படியாக இருப்பதால் வெங்காய விற்பனையில் ஈடுபட்டுள்ள கூட்டுறவு அதிகாரிகள் ஹெல்மட் அணிந்து கொண்டு விற்பனையில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''வெங்காய விலையேற்றம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பிகார் மாநில கூட்டுறவு சங்கம் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்படுவது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருந்த போதும் சில இடங்களில் விற்பனை நேரத்தில் கல் எறியும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி ஹெல்மட் அணிந்து கொண்டு வெங்காய விற்பனையில் ஈடுபட்டு வருவதாக'' அந்த அதிகாரி கூறியுள்ளார்.