பிச்சை எடுத்த எஞ்சினியரிங் மாணவர்.. ‘அழகான ஆங்கிலம்’... படித்த கொஞ்சம் நாட்களிலேயே மனநலம் பாதிப்பு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகோவில் வளாகத்தில் தகராறு செய்த பிச்சை எடுத்த நபரை விசாரித்தபோது, காவல்நிலையத்தில் அழகான ஆங்கிலத்தில் புகார் அளித்ததால் போலீசார் திகைத்துப் போயினர்.

ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜெகன்னாதர் கோவில் வளாகத்தில் பிச்சை எடுப்பவர் கிரிஜா சங்கர் மிஸ்ரா. இவர் வழக்கமாக பிச்சை எடுக்கும் இடத்தில், ரிக்ஷாக்காரர் ஒருவர் தனது வாகனத்தை நிறுத்தியதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு, அடிதடியாக மாறியது. பிச்சைக்காரர் தாக்கியதில், ரிக்ஷாக்காரருக்கு ரத்தம் கொட்டத் தொடங்கியது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர், இருவரிடமும் புகார் மனு தருமாறு கேட்டுள்ளனர். அப்போது பிச்சைக்காரர் கிரிஜா சங்கர் மிஸ்ரா, ஆங்கிலத்தில் சரளமாக தனது புகார் மனுவை எழுதினார். அதைப் பார்த்த போலீசார் ஆச்சரியமடைந்தனர். இதையடுத்து, அவரிடம் தோண்டித் துருவி கேள்வி கேட்டனர்.
அப்போதுதான், அவரது பின்னணி தெரியவந்துள்ளது. புவனேஸ்வரை சேர்ந்த ஓய்வுபெற்ற டி.எஸ்.பி.யின் மகன் கிரிஜா சங்கர் அவர் என்பதும் பி.டெக். பட்டதாரி என்பதும் தெரியவந்தது.
படிப்பை முடித்த சில ஆண்டுகளிலேயே மனநலம் பாதிக்கப்பட்ட அவர், புரிக்கு வந்து பிச்சை எடுத்து வந்தார் என்பதையும் போலீசார் தெரிந்துகொண்டனர். அவரது குடும்பத்தினரை கண்டறிந்து சேர்த்து வைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
