‘கொரோனா பயத்தால்’... ‘வீட்டை காலி செய்ய சொல்லும் உரிமையாளர்கள்’... ‘கலங்கும் மருத்துவர்கள், ஊழியர்கள்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Mar 24, 2020 09:30 PM

எய்ம்ஸ் மருத்துவர்களை வீட்டை விட்டு வெளியேறச் சொன்ன வீட்டு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

AIIMS Doctors Harassed For Treating Coronavirus Patients

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறை ஊழியர்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.

இந்தநிலையில், எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘வாடகை வீட்டில் குடியிருக்கும் கொரோனா மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், பிற மருத்துவ ஊழியர்களை, கொரோனா பரவும் என்ற அச்சத்தின் காரணமாக வீட்டின் உரிமையாளர்கள் வீட்டைக் காலி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்.

பலரைக் கட்டாயப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். பல மருத்துவர்கள் வீடுகளின்றி நடுரோட்டில் நிற்கின்றனர். இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

அதனையடுத்து, மருத்துவத்துறை ஊழியர்களை வீட்டைக் காலி செய்ய கட்டாயப்படும் வீட்டு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமித்ஷா டெல்லி மாநகர காவல் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கத்துக்கு போன் மூலம் தொடர்பு கொண்ட அமித்ஷா, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளார்.

Tags : #DOCTORSPROTEST #AIIMS