டிஆர் பாலு வீட்டுக்கு வந்த அதிமுக எம்பி.. டெல்லியில் ஒற்றுமையாக தமிழக எம்பிக்கள் செய்த சூப்பர் காரியம்
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி : திமுகவைச் சேர்ந்த டி. ஆர். பாலு அவர்களின் வீட்டிற்கு அதிமுக எம்.பி ஒருவர் வருகை தந்த சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக உருவாகியுள்ளது.
மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதற்காக, நீட் தேர்விலுள்ள பாதிப்புகள் குறித்து, ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில், குழு ஒன்றையும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைத்திருந்தார்.
சென்னை வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. அதிரடி உத்தரவு பிறப்பித்த போலீஸ்
நீட் விலக்கு மசோதா
அதன்படி, ஆய்வு மேற்கொண்ட அந்த குழு, அறிக்கையையும் தமிழக அரசிடம் ஒப்படைத்தது. மேலும், தமிழக சட்டசபையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டி, தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வு விலக்கு மசோதாவை, ஆளுநரின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. இதனை ஆளுநர் தான் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், இதுவரை குடியரசு தலைவருக்கு தமிழக அரசின் மசோதா சென்று சேரவில்லை என கூறப்படுகிறது.
அமித்ஷாவிடம் கோரிக்கை
இதனால், இதனை குடியரசு தலைவருக்கு அனுப்ப, ஆளுநருக்கு உத்தரவிட வேண்டி, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி. ஆர். பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சு. வெங்கடேசன், நவாஸ் கனி உள்ளிட்ட பல காட்சிகளைச் சேர்ந்த தமிழக எம்.பிக்கள், உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க திட்டமிட்டு டெல்லியில் கூடினர்.
தமிழக அரசியலில் வியப்பு
இதற்காக, டெல்லியிலுள்ள டி.ஆர். பாலுவின் வீட்டில், அனைவரும் கூடி, ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு, யாரும் எதிர்பாராத வகையில், அதிமுக கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் கலந்து கொண்டார். திமுக வீட்டில், அதிமுக எம்பி ஒருவர் வந்தது, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில், இரு கட்சிகளுக்கு இடையே பல்வேறு முரண்பாடு இருந்த போதும், நீட் விவகாரத்தில், இருவரும் இணைந்து சந்திப்பும் நடத்தியுள்ளது, மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, அனைவருமாக ஒன்று சேர்ந்து அமித் ஷா வீட்டுக்கும் சென்றனர். ஆனால், அமித்ஷாவிற்கு பிரதமருடன் சந்திப்பு இருந்த காரணத்தினால், அவர்களால் சந்திக்க முடியாமல் போனது. இதனால், அனைவரும் மீண்டும் டி. ஆர். பாலு வீட்டிற்கே சென்றுள்ளனர்.
தமிழக மக்கள் விருப்பம்
திமுகவைச் சேர்ந்த எம்.பி ஒருவரின் வீட்டிற்கு அதிமுக எம்.பி வந்தது, அரசியல் வட்டாரத்தில், ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இனி வரும் காலங்களில், தமிழகத்திற்கு எதிராக வரும் பிரச்சனைகளை, அரசியல் பாகுபாடு இன்றி, அனைத்து கட்சியினரும் இது போல ஒன்றாக கைக்கோர்த்து, அதனை நேரிட வேண்டும் என தமிழக மக்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.