எலான் மஸ்க்கிற்கு எதிராக வழக்கு போடும் ட்விட்டர் நிறுவனம்.. பதிலுக்கு மஸ்க் போட்ட ஒரே மீம்.. வைரல் ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது பலராலும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். அதன் பிறகு, நடைபெற்ற ட்விட்டர் நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை அவர் மறுத்துவிட்டார்.
அதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.
எச்சரிக்கை
ட்விட்டர் நிறுவனம் கைமாறும் பணிகள் நடைபெறுவதாக சொல்லப்பட்டுவந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தினை வாங்கும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்திருந்தார் எலான் மஸ்க். மேலும், ட்விட்டர் தளத்தில் ஸ்பாம் மற்றும் போலி கணக்குகளின் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதைத் தொடர்ந்து போலி கணக்குகளின் விபரங்களை ஒப்படைக்காவிட்டால் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை முழுவதுமாக கைவிட இருப்பதாக சமீபத்தில் எலான் மஸ்க் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கைவிடப்பட்ட திட்டம்
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக மஸ்க் தரப்பு அறிவித்திருந்தது. இதனையடுத்து, அவர் மீது வழக்கு தொடர இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருந்தது. இது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது இணைய தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அந்த மீமில்,"முதலில் என்னால் ட்விட்டரை வாங்க முடியாது என்றார்கள். அதன் பிறகு ஸ்பாம் மற்றும் போலி கணக்குகளின் விபரங்களை வெளியிட முடியாது என்றார்கள். இப்போது ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும்படி வற்புறுத்துகிறார்கள். தற்போது ஸ்பாம் மற்றும் போலி கணக்குகளின் விபரங்களை அவர்கள் நீதிமன்றத்தில் வெளியிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மீம் நெட்டிசன்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.