இன்று மதியம் காணத் தவறாதீர்கள்! ரசிகர்கள் கொண்டாடும் மெகா சீரியல் மறு ஒளிப்பரப்பு!
முகப்பு > சினிமா செய்திகள்முன்பு ஒரு காலமிருந்தது. அப்போது சீரியல்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. குடும்ப உறவுகளை மேம்படுத்தும் வகையில் தொலைக்காட்சி தொடர்கள் இருந்தன. தினமும் மக்கள் டிவி முன் ஆஜராகி தங்கள் மனதுக்குப் பிடித்த மெகா தொடர்களை பார்த்து வந்தனர். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக இன்றைய நெடுந்தொடர்கள் குடும்ப உறவுகளை கொச்சைப்படுத்தும் வகையிலும், வெறுப்பையும் வன்மத்தையும் வளர்க்கும் விதமாகவும் மாறி வருவது காலத்தின் கொடுமை அன்றி வேறென்ன.
இந்நிலையில், கொரோனா நோயின் அச்சுறுத்தலால் உலகமே முடங்கி போய் இருக்கிறது. இந்தியாவில் மக்கள் அனைவரும் வீட்டினுள் பாதுகாப்பாக இருக்கின்றனர். திரைத்துறை மற்றும் சின்னத்திரை என அனைத்து படப்பிடிப்புக்களும் ரத்து செய்யப்பட்டன.
புதிய தொடர்களும், அந்தந்த நாட்களில் ஒளிபரப்பாக வேண்டிய தொலைக்காட்சி தொடர்களும் ஒளிபரப்பாகவில்லை என்பதால் டிடி முதல் தனியார் தொலைக்காட்சி சேனல்கள் வரை தங்கள் புகழ்பெற்ற பழைய மெகா தொடர்களை மறு ஒளிபரப்பு செய்யத் தொடங்கியுள்ளன. அவ்வகையில் ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளிக் குவித்த மெட்டி ஒலி தொடரை சன் டிவி நேற்று முதல் ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1 மணிக்கு இந்த்த் தொடர் ஒளிபரப்பாகும். 811 எடிசோட்களைக் கொண்ட இந்த மெகா தொடர் இதே போல் 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் தொடங்கியது (2002 ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி 2005 அக்டோபர் 14-ம் தேதி முடிந்தது.)
மெட்டி ஒலியில் கோபி என்ற கதாபாத்திரம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. கோபியாக நடித்த திருமுருகன்தான் இத்தொடரின் இயக்குநர். இத்தொடரில் காவேரி, சேத்தன், காயத்ரி, டில்லி குமார், போஸ் வெங்கெட், சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தத் தொடர் எத்தனை முறை மறு ஒளிப்பரப்பு செய்யப்பட்டாலும் அதைப் பார்க்க ரசிகர்கள் தயாராகவே உள்ளனர். இனி தினமும் பல வீடுகள் ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற டைட்டில் பாடலில் பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் குரலைக் கேட்கலாம்.