இதுதான்! இதனாலதான் மக்கள் செல்வன்னு பாராட்டறாங்க! விஜய் சேதுபதியை வாழ்த்திய பெண்!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் சேதுபதி மக்கள் செல்வன் என்று கொண்டாடப்படுவதன் காரணம் அனைவருக்கும் தெரியும். நடிகர் என்பதைவிட மனித நேயமிக்கவர் என்றுதான் அவர் அறியப்பட விரும்புவார். சமூகத்திலிருந்து விலகி இல்லாமல் மக்களுடன் மக்களாக இருப்பதால்தான் அந்தப் பட்டத்துக்கு முழுத் தகுதியானவராக விளங்குகிறார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய ‘நம்ம ஊரு ஹீரோ’ என்ற நிகழ்ச்சி சமீபத்தில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் விஜய் சேதுபதி. அந்நிகழ்ச்சியில் பழங்குடி பெண்ணான பச்சையம்மாள் என்பவரைச் சந்தித்தார். விஜய் சேதுபதியின் ஒவ்வொரு கேள்விக்கும், பச்சையம்மாள் விரிவாக பதில் கூறினார். பல ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்து 2012-ஆம் ஆண்டுதான் சமூக ஆர்வலர்களால் மீட்கப்பட்டார் பச்சையம்மாள்.
தன்னைப் போல வேறு யாரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற அக்கறையில் கொத்தடிமைத்தனத்தில் சிக்கிய பலரை மீட்க முடிவெடுத்து, தன்னை மீட்ட தன்னார்வலர்களுடன் இணைந்து களப் பணியில் இறங்கினார். மேலும் விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு சங்கம் ஒன்றையும் உருவாக்கினார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களை இக்கொடூரத்திலிருந்து மீட்டிருக்கிறார் பச்சையம்மாள். அவர்களது மறுவாழ்க்கைக்கான அத்தனை விஷயங்களையும் செய்து வருகிறார்.
அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பச்சையம்மாளின் கனவு என்னவென்று கேட்க, இரண்டு கனவுகளைக் கூறியிருக்கிறார் பச்சையம்மாள். முதலாவதாக ஒரு அலுவலகம் தொடங்கி அதில் கொத்தடிமைகளாகச் சிக்கி மீண்டு வந்த அனைவரைப் பற்றிய தகவல்களையும் இணையத்தில் பதிவேற்றி உலக மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது, அடுத்ததாக கொத்தடிமையாக இருக்கும் மக்களின் மறுவாழ்க்கைக்காக பல ஊர்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது, இது வரை வாடகைக் காரில் சென்று கொண்டிருக்கிறோம். சில சிரமங்கள் உள்ளது, சொந்தமாக ஒரு கார் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தனது கனவை வெள்ளந்தி மனசுடன் கூறியிருக்கிறார்.
நிகழ்ச்சி முடிந்த சில தினங்களில் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்திலிருந்து சிலர் பச்சையம்மாவை சந்தித்து கார் சாவி மற்றும் ரூபாய் ஐந்து லட்சத்தை உதவித் தொகையாக பச்சையம்மாளிடம் ஒப்படைத்தனர். மிகவும் மனம் நெகிழ்ந்து போனார் பச்சையம்மாள். அதே உற்சாகத்துடன் தனது கனவை தற்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் அவர். கொத்தடிமையாக சிக்கிய மக்களைப் பற்றி தகவல் அறிந்தால், உடனடியாக காரில் சென்று அவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு, அவ்வாறு மீட்கப்பட்ட மக்களை திரும்ப அழைத்து வர அந்தக் காரைப் பயன்படுத்துகிறார்.
தற்போது கொரோனா பிரச்னையால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இருப்பதால் பச்சையம்மாளின் பரபரப்பான செயல்பாடுகளுக்கு சற்று ஓய்வு கிடைத்துள்ளது. ஆனாலும் அவர் அசராமல் ஊரடங்கு உத்தரவுக்கு முந்தைய தினத்தில் நடிகர் விஜய் சேதுபதி பரிசளித்த காரில் பயணித்து கொத்தடிமை முறையால் பாதிக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார். அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்த அறிவுரைகளை எடுத்துக் கூறி, சானிடைஸர் மற்றும் மாஸ்கை இலவசமாக வழங்கினார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருத்தணி உள்ளிட்ட பல இடங்களிலுள்ள சுமார் 500 நபர்களுக்கு 1000 மாஸ்க்களும் சானிடைஸர்களும் வழங்கப்பட்டன. மேலும் பச்சையம்மாள் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு விஷயங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களைத் தவிர இன்னும் கொத்தடிமை முறையில் சிக்கி , விடுதலை நாளுக்காக காத்திருக்கும் மக்களையும் சந்தித்து மாஸ்க் மற்றும் சானிடைஸர்களையும் வழங்கினார். விஜய் சேதுபதி தங்கள் சங்கத்திற்கு கார் வழங்கியதால் இதுபோன்ற அவசர காலங்களில் அது பேருதவியாக இருந்தது என்று தனது மனமார்ந்த நன்றிகளை விஜய் சேதுபதிக்கு காஞ்சிபுரம் ரசிகர் மன்றத்தின் மூலம் தெரிவித்துள்ளார் பச்சையம்மாள்.
விஜய் சேதுபதி அன்று ஒருவருக்கு மட்டும் உதவியிருக்கவில்லை. அவர் செய்த ஒரு உதவியால் தற்போது பலர் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் செல்வனுக்கு வாழ்த்துகள்!