விஜய் தேவரகொண்டா படம் கைவிடப்பட்டதா? - உண்மை விவரம் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 25, 2019 08:17 PM
‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவல் மறுக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ‘டியர் காம்ரேட்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 தென்னிந்திய மொழிகளில் வெளியாகிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். யாஷ் ரங்கினேனி தயாரித்துள்ள இப்படம் நாளை (ஜூலை 26) ரிலீசாகவுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்ட ‘ஹீரோ’ திரைப்படம் கைவிடப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இது குறித்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தரப்பிடம் Behindwoods தொடர்புக் கொண்டபோது, அவர்கள் இந்த தகவலை முற்றிலும் மறுத்துவிட்டனர்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே டெல்லியில் தொடங்கி, 20% முடிவடைந்துவிட்டது. ஆனால், இந்த நிலையில் படம் கைவிடப்பட்டதாக பரவும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக’ தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் விஜய் தேவரகொண்டா பைக் ரேஸராக நடிப்பதாகவும், இப்படம் மிகுந்த பொருட்செலவில் உருவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஷாலினி பாண்டே, மாளவிகா மோகனன் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.