உலகமே கொரோனா எனும் கொடிய நோயின் அச்சம் காரணமாக உறைந்து போயிருக்க, மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரையில் ஊரடங்குச் சட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று (ஏப்ரல் 3) வீடியோ மூலம் நாட்டு மக்களிடம் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் பிறப்பிக்கும் கட்டுப்பாடுகளை மதிக்கும் மக்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்வது, பொழுதுபோக்காக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என்பவற்றில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
அவ்வகையில், டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் Man Vs Wild நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் எப்போதும் அதிகளவில் ரசிகர்கள் உண்டு. குறிப்பாக தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சிக்கு நம்மூரில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மனிதர்கள் வாழ கடினமானதாக இருக்கும் காட்டுப்பகுதியில், உயிர் பிழைத்திருப்பதற்கான சாத்தியங்களை கண்டறியும் சாகஸமே இந்நிகழ்ச்சியின் தனிச்சிறப்பு.
Man Vs Wild நிகழ்ச்சியில் Bear Grylls என்ற சாகஸ வீரருடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி கர்நாடகாவில் உள்ள பாந்திப்பூர் காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இது ரஜினிகாந்த் பங்கு பெற்ற முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும்.
இந்நிகழ்ச்சி கடந்த 23 மார்ச் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது. 12 டிஸ்கவரி நெட்வொர்க் சேனல்களில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது. பெரும் ஆபத்துகள் நிறைந்த வனப்பகுதிகளில் இயற்கையோடு ஒட்டி உயிர் வாழும் முறைகளை உணர்த்தும் வகையில் சூப்பர்ஸ்டார் இந்த நிகழ்ச்சியில் அசத்தினார் . நீர் வளத்தின் பாதுகாப்பை பற்றி தனது கருத்துக்களை வெளிப்படையாக பியரிடம் பகிர்ந்து கொண்டார். ரஜினி பற்றி Bear Grylls கூறுகையில் “ரஜினி அவர்களை தலைவா என்று அன்புடன் இந்திய துணைக்கண்டம் அழைக்கிறது. அவருடைய எளிமை, பொறுமை, பெருந்தன்மை பார்த்து வியக்கிறேன். அவரை ஒரு உன்னத மனிதராகவும் நான் பார்க்கிறேன்” என்று ரஜினியைப் பற்றி தனது கருத்தை பதிவு செய்தார்.
பியர் கிரில்ஸுக்கும் ரஜினிக்குமிடையேயான சாகஸங்களும், உரையாடலும் கலந்து கட்டியிருந்த இந்நிகழ்ச்சி இதுவரை 124 மில்லியன் வ்யூவர்ஸ் பெற்றுள்ளது. அவ்வகையில் சமீப காலங்களில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சி என்ற பெருமை கிடைத்துள்ளது. இந்த சாதனையை ரஜினி ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்