www.garudabazaar.com

‘ஃபைட் மட்டும் 85 நாள் எடுத்தோம்!’.. அதகளமான ‘அகாண்டா’ பட காட்சிகள் பற்றி ‘ஃபைட் மாஸ்டர்’!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘அகண்டா’ என்கிற பிரபலமான தெலுங்கு படத்தில் நடிகர் பாலகிருஷ்ணா நாயகனாக நடித்திருக்கிறார்.  இப்படத்தில் நடிகர் பாலகிருஷ்ணாவின் ஸ்டண்ட் காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Stunt Siva secret behind Nandamuri Balakrishna akhanda fight

இந்நிலையில் இதுகுறித்து பேசிய இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவா, “பாலகிருஷ்ணா அவர்களுடன் இது எனக்கு மூன்றாவது படம். முதல் படம் ‘லட்சுமி நரசிம்மன்’. இரண்டாவது படம் ‘சிம்ஹா’. மூன்றாவது படம் ‘அகண்டா’. மூன்று படங்களுமே வெற்றி படங்கள் தான். அதிலும் சமீபத்தில் ‘அகண்டா’ மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது.

இப்படத்தின் இயக்குநர் போயபதி ஶ்ரீனு எனக்கு இந்த வாய்ப்புக் கொடுத்தார். இப்படத்தில் ஆக்க்ஷன் மிகப்பெரிய அளவில் இருக்கும். ஆக்‌ஷன் காட்சி மட்டுமே 85 நாள்கள் படமாக்கப்பட்டது. இதற்கு எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது எனது இரு மகன்கள் கெவின் குமார் மற்றும் ஸ்டீவன் குமார் தான். ஆக்க்ஷனுக்காகவே இப்படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. நல்ல பெயர் கிடைத்திருக்கிறது.

இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் இரண்டாவதாக வரும் அகோராவின் கதாபாத்திரம் தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரையிலான சண்டை காட்சிகளை இயக்கியது சவாலாக இருந்தது. பிலிம் முதல் டிஜிட்டல் காலமான இதுவரை ஒரு படத்தில் பணியாற்றுவதற்கு முன்பு  கதை கேட்பது வழக்கம், ஏனெனில் அந்த கதைக்கு நாம் சண்டை காட்சியை இயக்கினால் அதில் புதிதாக என்ன செய்யமுடியும், தற்போதைய ட்ரெண்ட் என்ன, அதில் எனக்கு எந்த அளவு வெற்றி கிடைக்கும் என்பதை சிந்தித்து பணியாற்றுவேன்.

அது போல் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த அனைத்து படங்களும் மாஸாக இருக்கும். இந்த படத்தில் கதைக்கு ஒத்துப்போகும் படியான சண்டைக் காட்சியையும், மாஸூடன் கிளாஸையும் இணைக்கும் வகையில் இயக்கியுள்ளேன். இந்த படத்தில் ஆக்க்ஷன் ஹிட் அடித்ததன் காரணம், டைரக்டர். அவர் சொன்ன கதை, மற்றும் இதை எப்படி எடுக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு நான் இயக்கியஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்த  4 படங்கள், ‘சேது,’ ‘நந்தா’, ‘பிதாமகன்’ மற்றும் ‘நான் கடவுள்’. வேறுபட்ட மொழிகளில் இயக்குவதற்கு ஏற்ற மனநிலை மற்றும் சினிமா மீதான புரிதல் வேண்டும்.

இன்று திரையுலகில் பல பிரபலங்கள் என்னை அழைத்து இந்திய திரையுலகில் இது போன்ற சண்டை காட்சியை யாரும் கண்டதில்லை, சிறந்த ஆக்க்ஷன் என பாராட்டி வருகின்றனர். என்னுடைய சினிமா வாழ்க்கையில் மட்டுமில்லை நடிகர் பாலகிருஷ்ணா அவர்களுக்கும் ‘அகண்டா ‘திரைப்படம் ஒரு அடையாளம் என

பல்வேறு நாடுகளில் இருந்து பாராட்டுக்கள் வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நடிகர் பாலகிருஷ்ணா பயம் அறியாத ஒரு ஆக்க்ஷன் ஹீரோ. ஒரு சில காரணங்களால் அவருடன் அடிக்கடி இணைந்து பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இதில் அவர் நடிக்கும் அகோரா கதாபாத்திரம் ஒரு வலுவான பாத்திரம். இதுவரை அவர் செய்யாத அளவிற்கு புதுமையாக இருக்கவேண்டும் என்பதற்கு மிகவும் கடினமாக உழைத்தோம். ஒவ்வொரு சண்டை காட்சி எடுப்பதற்கும், குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பே பயிற்சி செய்வார் நடிகர் பாலகிருஷ்ணா. அவர் பயிற்சியிலும் ஒத்திகையிலும் நானும் என் மகன் கெவின் சொன்னதை விட, நடிக்கும் போது 200 மடங்கு அவரின் நடிப்பை வெளிப்படுத்துவார்.

மற்ற படங்களில், நடிகர்கள் சண்டையிடும் போது கையில் கிடைக்கும் ஆயுதங்களை பயன்படுத்தி சண்டையிடுவர். பின்னர் அதை தூக்கி வீசிவிடுவது வழக்கம். ஆனால், இதில் நடிகர் பாலகிருஷ்ணா கையில் எடுப்பது  சூலம் என்பதால் அவர் கையில் எடுத்து அந்த காட்சி முடியம் வரை கையில் இருந்து விழுந்து விட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன். சினிமாவில் நிறைய படங்களில் சூலத்தை பயன்படுத்தியிருந்தாலும், இந்த அகோரா கதாபாத்திரம் கையில் சூலத்தை எடுத்தால் அடுத்த 10 வருடத்திற்கு மக்கள் மத்தியிலும் திரையுலகிலும் இதை பற்றி தான் பேச்சு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து தான் எடுத்தோம்.

நீருக்கு அடியில் வரும் சண்டைக் காட்சிகளும், அதில் நடித்தது பாலகிருஷ்ணா என்பதால் தான் அந்த இடத்தில எடுபட்டது. நடிகர் பாலகிருஷ்ணா சொன்னதை செய்யும் நடிகர். பெரும்பாலும் ஆலோசனை வழங்க மாட்டார். அதே நேரம் அவர் ஆலோசனை கொடுக்க இடம் தராத வகையில் நான் காட்சிகளை கூறுவேன். கிளைமாக்ஸ் சண்டையின் போது நடிகர் பாலகிருஷ்ணா அவர்களுக்கு அடிபட்டது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல், ரத்தத்தை துடைத்துவிட்டு அடுத்த காட்சிக்கு தயாராகிவிட்டார்.

சிறு வயதில் இருந்தே நான் எந்த படத்திற்கு வேலை செய்ய சென்றாலும் இறுதி 3 நாட்கள் என் மனைவியும் என் இரு மகன்களும் உடன் இருப்பார்கள். அது முதலே அவர்களுக்கு ஆர்வம் வந்தது. அதனால் நான் கஷ்டப்பட்டு வந்தது போல் இவர்களும் கஷ்டப்பட கூடாது என்பதற்காக நான் இவர்களை கராத்தே பயிற்சிக்கு அனுப்பினேன். அவர்கள் அதில் தங்கம் வென்றனர். உலக கராத்தே சாம்பியன்ஷிப் வென்றுள்ளனர். இவர்களுடைய கராத்தே ஐடியா தான் அகண்டா.

அதே போல் என் மகன்களும் அந்த உணர்ச்சியை புரிந்து கொண்டதன் காரணத்தால் தான் படம் ஒரு உணர்வுள்ள படமாக நகர்ந்தது. இந்த படத்திற்காக நான் ஒப்பந்தம் செய்த 3 படங்களை செய்ய முடியாமல் போனது. இந்த படத்தில் 85 நாட்கள் மொத்தம் பணிபுரிந்தோம். எனக்கு தெரிந்து இந்தியாவில் சிறுவயது சண்டை இயக்குனர்கள் என் மகன்கள் தான். அகண்டா தயாரிப்பாளர் ரவீந்தர் ரெட்டி எதைப்பற்றியும் யோசிக்காமல் போதிய வசதிகளையும் தேவைகளையும் செய்து கொடுத்தார். சண்டை காட்சிகளுக்கு மட்டும் கோடி கணக்கில் செலவு செய்தார். கிளைமாக்ஸ் சண்டையில் 150 ஸ்டண்ட் ஆர்டிஸ்ட்களை பயன்படுத்துவதற்கும் அவர் ஏதும் சொல்லவில்லை. அவர் கேட்டது 'மாஸ்டர் ஃபைட் அனைத்தும் சூப்பரா வரணும்' என்பது மட்டும் தான். அவர் கேட்டது போல் நாங்களும் சிறப்பாக செய்திருக்கிறோம் என்று பாராட்டி தெரிவித்தார்.

கெவின் இந்த படம் குறித்து பேசியபோது, “வழக்கமான ஒரு சண்டை இயக்குனரால் அகண்டா படத்தை இயக்க முடியாது. இந்த படத்தை இயக்க நடிகர் பாலகிருஷ்ணா ரசிகனாக இருந்தால் மட்டும் முடியும், நான் அவருடைய ரசிகன் என்பதால் தான் இது இவ்வளவு சிறப்பாக இயக்க முடிந்தது. சண்டை காட்சிகள் அனைத்தும் ஒரு விதமான காரணங்களை கொண்டு தான் இருக்கும். எடுத்துக்காட்டாக, இந்த படத்தில் அகோரா சண்டையிடும் போது ஒருவரை அடித்த பிறகு அவரை கண்டுகொள்ள மாட்டார். இயல்பான ஒரு கதாநாயகன் தான் அடித்தவுடன் அவர் மீது கவனம் செலுத்துவர் என்ற ஒரு புரிதல் உடன் இயக்கினோம்.

என் அப்பா நான் எதை விரும்புகிறேனோ அதை அடையாளம் காட்டி அதை நோக்கிய பாதையில் என்னை வழி நடத்துகிறார். அது தான் என்னை வாழ்க்கையில் வெற்றி அடைய வைக்கப்போகிறது. பொதுவாக அம்மாக்கள் அனைவரும் தன் பிள்ளைகளை அப்பாவின் தொழிலுக்கு அனுப்பமாட்டார்கள். ஆனால்  என் அம்மா தான் என்னை முதலில் ஸ்டண்ட் யூனியனில் சேர சொன்னார். எனது அம்மாவிற்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் கராத்தே நன்றாக தெரியும் என்பதும் இந்த முடிவிற்கு காரணம்.” என கூறினார்.

இதேபோல், ஸ்டீவன் குமார் படத்தை பற்றி பேசியபோது, “ அகண்டா எனக்கு 15 படங்கள் பணியாற்றிய அனுபவத்தை கொடுத்தது. நடிகர் பாலகிருஷ்ணா பற்றியும், இயக்குனர் போயபதி ஸ்ரீனு உடன் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து சுமார் ஒரு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் இரவு 2 மணிக்கு நானும் என் சகோதரனும் பேசிக்கொண்டு இருந்தோம். அதற்கு அடுத்து சில மாதத்தில் அப்பாவிற்கு போயபதி ஸ்ரீனு அழைப்பு விடுத்து. அகண்டா படத்திற்கு நீங்கள் சண்டை இயக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார். படம் வெளியான பிறகு நாங்கள் ஒரு திரையரங்கில் அமர்ந்து படம் பார்த்தோம், 1100 பேர் மத்தியில் ரசிகர்களின் சத்தத்துடன் பார்த்த உணர்வு வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.” என்று பேசினார்.

Stunt Siva secret behind Nandamuri Balakrishna akhanda fight

People looking for online information on Akhanda, Nandamuri Balakrishna, Stunt Siva will find this news story useful.