ஹர்பஜன் சிங்குடன் சந்தானம் ஆடும் ‘டிக்கிலோனா’ ஸ்டார்ட்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 18, 2019 11:01 AM
நடிகர் சந்தானம் மூன்று டேடங்களில் நடிக்கும் ‘டிக்கிலோனா’ திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'A1' திரைப்படத்தை இயக்குநர் ஜான்சன் இயக்கியிருந்தார். இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை பெற்றது.
இதையடுத்து, இயக்குநர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவான ‘டகால்ட்டி’ திரைப்படத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் நிறைவு செய்த சந்தானம், இயக்குநர் கண்ணன் இயக்கும் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக நடித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து, கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்குகிறார். 'ஜென்டில்மேன்' படத்தில் கவுண்டமணி - செந்தில் காமெடியில் மிகவும் பிரபலமான 'டிக்கிலோனா' என்ற சொல்லை இப்படத்திற்கு தலைப்பாக அறிவித்துள்ளனர்.
இப்படத்தில் அனகா, ஷிரின், யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனீஷ்காந்த், ராஜேந்திரன், சித்ரா லக்ஷ்மணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, யூடியூப் பிரபலமான இட் இஸ் பிரஷாந்த் ஆகியோருடன் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயருமான ஹர்பஜன் சிங் இந்த படத்தில் நடிக்கிறார்.
இதன் மூலம் ஹர்பஜன் சிங் திரையுலகில் நடிகராக அறிமுகமாகவிருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது