அழகியல் மற்றும் ஆழமான கருத்துடன் ஒரு குறும்படம் இது - ‘மனம்’ விமர்சனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒரு குறும்படத்தில் என்னவெல்லாம் சொல்லி விட முடியும் என்று நாம் நினைப்பதற்கு மேலாக,அதற்கும் மேலாக சொல்லியிருக்கிறது மனம். தனியாக வாழும் வயதான பெண் ரோகினி (லீலா சாம்சன்). மற்றவர்களுக்கு உதவிகளை மனப்பூர்வமாக செய்து வருகிறார்.

review of behindwoods manam short film directed by ram mahindra

தினமும் வீட்டில் சமைத்து அதை வீதியில் உணவின்றி தவிப்பவர்களுக்கு ஒரு ஆட்டோவில் சென்று வழங்கி வருவதை வழக்கமாக கொண்டிருப்பவர். இன்னொரு பக்கம், கல்லூரியில் படித்துக் கொண்டே மாலை முதல் இரவு வரை உபர், ஸ்வீக்கிஸ் போன்றதொரு நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞன் ராம் (பரணீதரன்). தன்னுடைய வேலைக்காக பைக்கை தினமும் வாடகைக்கு எடுத்துக் கொண்டிருப்பவன். அவனது கனவு செகண்ட் ஹேண்டில் ஒரு பைக்கை எப்பாடுபட்டாவது வாங்கிவிட வேண்டும் என்பதே.

இந்நிலையில் ஒரு நாள் இரவு உணவு ஆர்டர் செய்கிறார் ரோகினி. ராம் அவளுக்கு உணவினை டெலிவரி தந்துவிட்டுச் செல்கிறான். மறுநாள் காலை தன்னுடைய கருப்பு நிற பர்ஸை காணவில்லை என்று எல்லா இடங்களிலும் தேடிப் பார்க்கிறார் ரோகினி. ஆனால் அது எங்கும் இல்லை. அதில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் பணத்தை வைத்திருந்தார். அந்தப் பணத்துக்கு என்ன ஆனது, ராமின் கனவு நிறைவேறியதா என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராம் மஹிந்திரா.

இந்த குறும்படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் கதை. மிக எளிமையான கதையில் வாழ்க்கையின் நீதியும், அன்பின் பேராற்றலையும் விளக்குகிறது. அன்பு, நம்பிக்கை, பேராசை, குற்றவுணர்வு ஆகியவற்றை ஆழமாக அணுகுகிறது.. வாழ்வின் தேவைகள் என்ன அதை நிறைவேற்ற என்ன செய்யவேண்டும், குற்றவுணர்வு ஒரு மனிதனை எப்படியெல்லாம் அலைக்கழிக்கும் என்பதை மிக நுட்பமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் ராம் மஹிந்திரா.

மன்னிப்பு என்பது மற்றவர்களுக்கு நாம் வழங்கும் கொடை அல்ல, நமக்கு நாமே அளித்துக் கொள்ளும் பெரும் நிம்மதி என்பதையும் அழகியலுடன் இக்கதை சொல்கிறது. இதில் லீலா சாம்சன் மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார். அவருடைய கேஷுவலான உடல்மொழியும் குரலும் இந்த குறும்படத்துக்கு மிகப் பெரிய ப்ளஸ், அப்பாவியான முகத்தோற்றத்துடன் பரணீதரன் இந்த கதாபாத்திரத்துக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்துகிறார். மிகையற்ற நடிப்பு இக்கதையோட்டத்துக்கு ஏற்றதாக இருந்தது. ஆட்டோ ட்ரைவர், பைக் கடை ஊழியர், பக்கத்து தெருவில் வசிக்கும் நண்பர், கீழ் வீட்டில் வசிப்பவர் என பிற பாத்திரப் படைப்புக்களும் இயல்புடன் யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கின்றனர்.

இதுபோன்ற குறும்படங்களின் தேவை இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியம்., காரணம் பசிக்காக திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு  மக்களால் கல்லடி பட்டு இறந்தவர்கள் இந்த நாட்டில்தான் அதிகம் பேர் உள்ளனர். இத்தகைய கதைகள் ஒருவனுடைய மனசாட்சி இயங்கும் விதத்தையும், மன்னிப்பால் கிடைக்கும் மன மலர்ச்சியையும் நேர்த்தியாக காட்சிப்படுத்துகிறது. அதுவும் இறுதிக் காட்சியில் ராம் பைக்கை கிளப்பியதும் திரும்பிப் பார்ப்பான், ரோகினியின் புன்னகையும் அந்தத் தருணமும் பார்வையாளர்களுக்கு தரும் மனநிறைவுதான் இதன் வெற்றி.

மொத்தத்தில் மனம் குறும்படம் நடைமுறை வாழ்க்கையில் தவிர்க்க முடியாமல் எதிர்கொள்ளும் சிக்கலின் போது மன ஓர்மையுடன் அதனை எப்படி அணுக வேண்டும் என்பதையும், மனிதர்கள் ஒருவருக்கொருவர் எவ்வகையில் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் பிரச்சாரத் தொனி துளியுமின்றி விளக்குகிறது. 

மனம் குறும்படம் உங்கள் பார்வைக்கு

review of behindwoods manam short film directed by ram mahindra

People looking for online information on Leela samson, Manam will find this news story useful.