www.garudabazaar.com

Video: “கோடி ரூபா கொடுத்தாலும் அது மட்டும் நோ..”.. ராமராஜனின் கம்பேக் படம் ‘சாமானியன்’!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கிட்டத்தட்ட 10 வருட இடைவெளிக்குப்பிறகு ‘மக்கள் நாயகன்’ நடிகர் ராமராஜன் சாமானியன் படம் மூலம் கதாநாயகனாகவே நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ராகேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய  படங்களை இயக்கியவர். இந்த படத்தில் கதாநாயகியாக நக்சா சரண் என்பவர் நடிக்கிறார்.

Ramarajan Speech in his 45th film launch Saamaaniyan Video

அச்சுராஜாமணி இசை அமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத்தொகுப்பை  ராம்கோபி கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைக்கிறார். இந்தப்படத்தின் பாடல்களை சினேகன் மற்றும் விஜேபி ஆகியோர் எழுத, இவர்களுடன் பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் முதன்முறையாக இந்த படத்திற்காக ஒரு  பாடலை எழுதியுள்ளார்.

இந்த படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் என 5 மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை தி நகரில் உள்ள கிருஷ்ணவேணி  திரையரங்கில் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட படக்குழுவினருடன் மலேசிய முன்னாள் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் குலசேகரன், இயக்குனர் சந்தானபாரதி, கவிஞர் சினேகன், கும்கி-2 பட கதாநாயகி ஷ்ரத்தா ராவ், பாக்ஸர் பட கதாநாயகி  ஆர்யா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Ramarajan Speech in his 45th film launch Saamaaniyan Video

இதில் தயாரிப்பாளர் மதியழகன் இந்தப்படம் குறித்தும் தனது நிறுவனத்தில் உருவாகும் தயாரிப்புகள் குறித்தும் பேசும்போது, “ராகேஷ் இந்த படத்தின் கதையை சொன்னதும் ராமராஜன் சார் தான் முதலில் நினைவுக்கு வந்தார். அதேபோல அவரிடம் கதை சொன்னதும் சாமான்யன் என்கிற டைட்டிலும் என் மனதில் உடனடியாக தோன்றியது. இத்தனை வருடங்கள் கழித்து நடிக்க வரும் அவருக்கு இது ஒரு கம்பேக் படமாக இருக்கும்” என்று கூறினார்.  இந்த படத்தின் கதாசிரியர் கார்த்திக் பேசும்போது, “இந்த படத்தில் எனக்கு பல இன்ப அதிர்ச்சிகள் கிடைத்துள்ளன. என்னுடைய கதையில் ராமராஜன் சார் ஹீரோவாக நடிக்கிறார் என்பதை என்னால் இப்போதுவரை நம்ப முடியவில்லை” என்று தனது பிரமிப்பை வெளியிட்டார்.

இயக்குனர் ராகேஷ் பேசும்போது, “சாமான்யன் என்றாலே காமன்மேன் தான்.. ஆனால் இந்த சாமான்யன் காமன்மேன் அல்ல.. அசாதாரணமானவன். கிராமத்தில் இருக்கும் ஒரு நல்ல மனிதர் சூழ்நிலை காரணமாக ஒரு நேரத்தில் திடீரென மாறினால் என்ன ஆகும் என்பதுதான் இந்த கதை. ஹிட்ச்காக் பட பாணியில் இந்த கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் ராமராஜன் நடித்தால் நன்றாக இருக்கும் என முதலில் சொன்னது தயாரிப்பாளர் மதியழகன்தான். அந்தவிதமாக பத்து வருடங்களாக நல்ல கதைக்காக காத்திருந்த ராமராஜனிடம் கதை சொல்லி வெறும் 24 மணி நேரத்தில் இந்தப்படத்தை உறுதி செய்தோம்” என்று கூறினார்.

இப்படத்தின் நாயகன் நடிகர் ராமராஜன் பேசும்போது, “என்னுடைய கரகாட்டக்காரன் படம் இதே கிருஷ்ணவேணி தியேட்டரில் அன்று 300 நாட்கள் ஓடியது. இன்று அதே தியேட்டரில் என்னுடைய படத்தின் விழா நடப்பது சந்தோஷமாக இருக்கிறது. அதுமட்டுமா என்னுடைய பட விழா ஒன்றில் இத்தனை மைக், இத்தனை  கேமராக்களை நான் பார்ப்பது இதுதான் முதல்முறை.  நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும் என்பது போல இப்போது மீண்டும் ஹீரோவாகவே திரும்பி வந்துள்ளேன். இந்த படத்தில்  நான்  ஹீரோ என்பதைவிட  கதையும் திரைக்கதையும் தான் ஹீரோ என்று சொல்லலாம். இத்தனை வருடங்களில் எத்தனையோ கதைகள் கேட்டேன். சரியாக அமையவில்லை. ஆனால் எவ்வளவு கோடி கொடுத்தாலும் தரம் கெட்டுப்போய் மோசமான படங்களில் நடிக்க மாட்டேன். நான் பின்தொடர்வது புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பாதையை.

Ramarajan Speech in his 45th film launch Saamaaniyan Video

இந்த 45 வருடங்களில் 45 படங்களில் நடித்துவிட்டேன். சினிமாவுக்கு வந்ததில் இருந்து இப்போதுவரை நான் தாடி வைத்ததே இல்லை. இந்த படத்திற்காக முதன்முறையாக தாடி வைத்து நடிக்கிறேன். இந்தப்படத்தின் இன்டர்வல் காட்சியை கேட்டு திகைத்துவிட்டேன். இதுவரை தமிழ் சினிமாவிலேயே வந்திராத அப்படி ஒரு இன்டர்வெல். இந்த படத்தின் டைட்டில் என்னை கவர்ந்துவிட்டது. ஒரு படத்தின் டைட்டில் என்பது படத்திற்கு உயிர் போன்றது. படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கும்போது கூட அதற்கென தனியாக ஒரு டைட்டில் வைக்க வேண்டும். முதல் குழந்தை பிறந்தபோது ஜோதிடம், நாள், நேரமெல்லாம் கணித்து அலசி ஆராய்ந்து கண்ணன் என பெயர் வைத்துவிட்டு இரண்டாவது குழந்தை பிறக்கும்போது கண்ணன்-2 என யாராவது பெயர் வைக்கிறார்களா..? 

Ramarajan Speech in his 45th film launch Saamaaniyan Video

50 படம் நடித்துவிட்டு அதன்பிறகு டைரக்சன் பக்கம் போய்விடலாம் என்றுதான் முடிவு செய்திருந்தேன். ஆனால் சூழ்நிலை அப்படியே மாறிவிட்டது. இப்போது 45 படம்.. தமிழ் சினிமாவில் நடித்த 50 படமும் சோலோ ஹீரோவாக நடித்த நடிகர்களே இருக்க மாட்டார்கள். இது போதும் எனக்கு.. முதல்முறையாக எனது படம் 5 மொழிகளில் வெளியாகிறது என்பதை இப்போது நினைத்தாலும் இது கனவா இல்லை நனவா என்று தான் நினைக்க தோன்றுகிறது. இந்தப்படத்தின் இயக்குநர் ராகேஷை பார்க்கும்போது என்னை முதன்முதலாக நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் விஅழகப்பன் போன்றே எனக்கு தோன்றுகிறார். இந்த நேரத்தில் எனக்கு இப்படி ஒரு படத்தை கொண்டு வந்ததற்காக தயாரிப்பாளர் மதியழகன் அவர்களுக்கும் இயக்குநர் ராகேஷுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.

VIDEO: “கோடி ரூபா கொடுத்தாலும் அது மட்டும் நோ..”.. ராமராஜனின் கம்பேக் படம் ‘சாமானியன்’! வீடியோ

Ramarajan Speech in his 45th film launch Saamaaniyan Video

People looking for online information on Ramarajan, Saamaaniyan will find this news story useful.