''போன தடவ 'விஸ்வாசம்', இந்த தடவ 'பட்டாஸ்'... - பிரபல தயாரிப்பாளர் மகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அசுரன்', 'எனை நோக்கி பாயும் தோட்டா' படங்களுக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு தனுஷ் நடித்துள்ள படம் 'பட்டாஸ்'. இந்த படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் சார்பாக டி.ஜி.தியாகராஜன் தயாரிக்க, துரை செந்தில்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Producer T.G.Thiyagarajan speaks about Viswasam and Dhanush's Pattas

இந்த படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் இருந்து சில் புரோ (Chill Bro !) ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வருகிற ஜனவரி 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படம் குறித்து தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் கூறியதாவது, "எங்கள் நிறுவனத்தின் அடிப்படை கோட்பாடே குடும்பத்தோடு படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஏற்ற படங்களை வழங்குவதுதான். பல வருடங்களாக இந்த கோட்பாடை தான் கடைப்பிடிக்கிறோம். உற்றார், உறவினர் என்று கூடி மகிழும் ஒரு பண்டிகை மாதம் ஜனவரி. 

எங்கள் நிறுவனத்தை பொறுத்த வரை கடந்த  வருடம் ஜனவரி மாதம் வெளி வந்த "விஸ்வாசம்" மாபெரும் வெற்றியை தந்தது என்றால் , வரும் ஜனவரி மாதம்  தனுஷ்  நடிப்பில் வெளிவரும் "பட்டாஸ்"  மீண்டும் ஒரு பெரும் வெற்றியை தரும் என நம்புகிறோம்.

தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி , எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் உள்ளது இப்படம். மிக ஜனரஞ்சகமான , கதை கனமான ஒரு படத்தை எங்கள் நிறுவனத்துக்கு வழங்கியதற்கு இயக்குனர் துரை செந்தில் குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். திட்டமிடப்படியே படப்பிடிப்பு நடத்தி , குறிப்பிட்ட நாளில் படம் வெளிவர உழைத்த இயக்குனரும், அவரது குழுவினரும் படத்தின் வெற்றிக்கு வித்திட்டு உள்ளனர்.

தனுஷ் உடனான எங்கள் உறவு மிக மிக ஆரோக்கியமானது. "பட்டாஸ்' எங்கள் உறவை மேலும் பலப்படுத்தும். இதுவரை நாங்கள் வெளியிட்டு உள்ள இரண்டு போஸ்டர்கலும்  அவரது வெவ்வேறு தோற்றங்களை வெளிக்காட்டி உள்ளது. நடிப்பில் அவர் ஒரு அசுரன் என்ற பாராட்டுக்கு அவர் உரியவர் என்பதை "பட்டாசு"மீண்டும் நிரூபிக்கும்'' என்று தெரிவித்தார்.