தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷின் பாலிவுட் ஸ்போர்ட்ஸ் படம் - ரிலீஸ் விவரம் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 11, 2019 11:23 AM
தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாகும் ‘மைதான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழில் முதன்முறையாக தயாரிப்பாளர் போனி கபூரின் பேவ்யூ புராஜக்ட்ஸ் நிறுவனத்தின் தயாரித்திருந்த அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து மீண்டும் தமிழில் அஜித் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் ‘வலிமை’ திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
இதனிடையே, பாலிவுட்டில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வந்த ‘மைதான்’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
பிரபல கால்பந்து வீரர் சயது அப்துல் ரஹிமின் வாழ்க்கையை தழுவி உருவாகியுள்ள இப்படத்தை ஹிந்தியில் ‘பதாய் ஹோ’ என்ற படத்தை இயக்கிய அமித் ஷர்மா இயக்கியுள்ளார். இப்படம் 1950-1963 வரை இந்திய கால்பந்து அணி படைத்த சாதனைகளை போற்றும் வகையில், இந்திய கால்பந்து விளையாட்டின் பொன்னான காலம் என்பதை குறிப்பிட்டு இப்படம் உருவாகவுள்ளது.
இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருடன் இணைந்து ஆகாஷ் சவ்லா, அருணவ ஜாய் செங்குப்தா ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்நிலையில், இப்படம் 2020ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி ரிலீசாகும் என இயக்குநர் அமித் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
27th November 2020 pic.twitter.com/k3EzYUBgqg
— Amit Sharma (@iAmitRSharma) November 11, 2019