வதந்திக்கு முற்றுப்புள்ளி - கங்கனாவின் ஜெயலலிதா பயோபிக்-ல் இணைந்த ஹாலிவுட் பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் ‘தலைவி’ திரைப்படத்திற்காக ஹாலிவுட் மேக்-அப் கலைஞரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது.

Kangana Ranaut's Jayalalithaa Biopic Thalaivi shoot post Diwali

தமிழில் கடந்த 2008ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.

விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘பகுபலி’, ‘மணிகர்னிகா’ உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதிய கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் பணிகள் தள்ளிப்போவதாக வதந்திகள் பரவி வருவதையடுத்து, தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன் இந்துரி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தலைவி’ திரைப்படம் குறித்த முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில், நடிகை கங்கனா, இப்படத்தில் 4 வித்தியாசமான வயதுடைய தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகவும், அதற்காக ஹாலிவுட் மேக்-அப் ஆர்ட்டிஸ்ட் ஜேசன் காலின்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் மைசூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதகாவும், ஆரம்பக்கட்ட பணிகளுக்கு சற்று கூடுதல் அவகாசமும் தேவைப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும் அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ‘தலைவி’ என்ற தலைப்பில் வெளியாகும் என தெரிகிறது.