இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பொறுப்பை ஏற்கிறேன் என்று சென்னையில் நடைபெற்ற இசை விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவுக்கு நேற்று 76-வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்க சாலிகிராமத்தில் உள்ள வீட்டுக்கு முன்பு ரசிர்கள் திரண்டனர்.
அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த இளையராஜா ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அதன்பின் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். அப்போது ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டனர். பின்னர் இளையராஜா நிருபர்களிடம் கூறும்போது எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள் வீட்டுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை என்றார்.
நேற்று மாலை இசை கொண்டாடும் இசை என்ற பெயரில் இசை நிகழ்ச்சி பூந்தமல்லியில் நடந்தது. இதில் இளையராஜா தான் பல்வேறு கால கட்டங்களில் இசை அமைத்த பாடல்களை பாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அப்போது அவர் பல்வேறு சுவராசிய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.
இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பொறுப்பை ஏற்கிறேன். இசைக்கலைஞர்கள் சங்கக் கட்டடம் கட்டுவதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.