இசைஞானி இளையராஜா இசையில் கடந்த ஆண்டு ‘60வது வயது மாநிறம்’, ‘மேற்கு தொடர்ச்சி மலை’, ‘சில சமயங்களில்’, பாலாவின் ‘நாச்சியார்’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘மாமனிதன்’, உதயநிதி ஸ்டாலின் - மிஷ்கினின் ‘சைகோ’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், வரும் ஜூன் 2ம் தேதி இசைஞானி இளையராஜாவின் பிறந்தநால் அன்று, மிக பிரம்மாண்டமான நேரடி இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘இசை செலிப்ரேட்ஸ் இசை’ என்ற இந்த இசை கச்சேரியில் கொண்டாடப்படும் பிரபல பின்னணி பாடகர்கள் பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடவுள்ளனர். மேலும், இந்த கச்சேரியில் மிகவும் பிரபலமான பாடல்கள் குறித்தும், பின்னணி இசை குறித்து நினைவுகளை இளையராஜா பகிர்ந்துக் கொள்கிறார்.
இம்முறை முதன் முறையாக கிட்டதட்ட 100 இசை கலைஞர்கள் இளையராஜாவுடன் ஒரே மேடையில் ரசிகர்களுக்கு இசை விருந்து அளிக்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவின் ஆஸ்தான பிரபல பின்னணி பாடகர்களான கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, உஷா உதுப், பாம்பே ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் பாடல்கள் பாடவுள்ளனர். இவர்களுடன் உலகநாயகன் கமல்ஹாசனும் இணைந்து சில சூப்பர்ஹிட் பாடல்களை பாடவிருப்பதாக தெரிகிறது.
இந்த பிரம்மாண்டமான இசை கச்சேரி, சினி இசை கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக நடத்தப்படும் ஒரு சமர்ப்பனம். இந்நிகழ்ச்சி இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி நடைபெறவுள்ளதால், கூடுதல் சிறப்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை. வரும் ஜூன்.2ம் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை இவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு கீழே உள்ள லிங்க் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
https://insider.in/isai-celebrates-isai-ft-isaignani-ilaiyaraaja-june2-2019/event